Friday, December 2, 2016

கனவு

அற்புதக்கனவு அமைந்த இரவு நேற்றிரவு
ஜெயகாந்தனோடு நானும் எனது தந்தையும் அவர் வீட்டிலிருந்தோம்..
விருந்து முடித்து விழுந்த பாத்திரங்களை
கழுவ முற்பட்டார் மீசைக்கார சிங்கம்
அவரைத்தடுத்து பாத்திரங்களை வாங்கிக்கொண்டு
பேசச்செல்லுமாறு வேண்டினேன்
அதுவோ விருப்பம்போலும் ..சிங்கம் விலகிப்போய் பேச அமர்ந்தது
காதைத்தீட்டி கவனித்துக்கேட்டேன்
கொடைக்கானல் மலைசிகரங்களையும்
வங்கதேசத்து கழிமுகத்துவாரங்களையும்
ஒப்பிட்டுப்பேசிக்கொண்டிருந்தது சிங்கம்
ஒன்றும் புரியவில்லை !!!
மலைகளின் அரசிக்கும் நீரோடும் பள்ளத்துக்கும்
என்ன உறவு இருக்கும்..
ஞானத்தகப்பன் பேசுவது புரிந்தால்
ஞானக்குழந்தை ஆகிவிடமாட்டோமா !!!
பாத்திரங்களைத்துலக்க ஆரம்பித்துவிட்டேன்

Friday, November 25, 2016

நமது இசை எங்கே ..



பாலமுரளிகிருஷ்ணா என்ற ஒரு இசை மாமேதை சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார், அவர் ஆந்திராவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து நமது மனிதர் என அறியப்படுபவர். சரி..அவர் இசை மாமேதை, அவர் என்ன செய்தார், செய்துகொண்டிருந்தார், ஏன் அவரை கொண்டாடுகிறீர்கள் என்று, தனது பயோடேட்டாவில் hobbies / Interests = Music என்று பதிந்து வைத்திருக்கும் ஒரு கோடியே 75 லட்சம் பேரைக்கேட்டால், அவர்., ஒருநாள் போதுமா அப்படினு ஒரு பாட்டு பாடிருக்கார், அப்புறம் இன்னொரு பாட்டு கூட பாடிருக்கார், அவர் வாய்ஸ் நல்லா இருக்கும்.. என்ற பதில்கள் தான் 99 சதவீதம் வரும். இது தான் hobby மற்றும் interest என்பதன் அர்த்தம்..அவர் செய்த கர்நாடக இசை ஆராய்ச்சி மற்றும் கீர்த்தனைகள் சென்று சேர்ந்தது மிகக்குறைந்த சதவீத மக்களைத்தான்..சிறிய அளவிலான சினிமா இசை பங்களிப்பு தான் பெரும்பான்மை தமிழ் மக்களில் அவரது பிம்பம் ..


என்னுடைய பாலமுரளிகிருஷ்ணாவுடனான அனுபவம் சற்று வித்தியாசமானது, நான் அவர் கச்சேரியை கேட்டது, முற்றிலும் சம்பந்தப்படுத்திக்கொள்ள முடியாத தாக்கா நகரில்.. Bengal Music Foundation என்ற வங்க தேச அரசு அமைப்பு ஒவ்வொரு வருடமும் இசைவிழாவை நவம்பர் இறுதியில் நடத்துகிறது..இந்தியாவின் தலைச்சிறந்த கலைஞர்கள், வங்கதேசத்தின் முன்னணி கலைஞர்கள் பங்கு பெரும் இந்த ஒரு வார நிகழ்வு நடப்பது ஏதோ குளிரூட்டப்பட்ட மூடப்பட்ட அரங்கில் அல்ல.. தாக்காவின் மையப்பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில், மிகசிறப்பாக ஒளி / ஒலி வசதி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பேர் அமர்வதற்கான சிறப்பான இருக்கை வசதிகளை செய்து, அவர்களுக்கான உணவு வசதியை தனியாக அமைத்து அங்கும் இசையை தொடர்ந்து கேட்க திரைகளை அமைத்து தரும் இந்த இசை விழா முழுக்கவும் பார்வையாளருக்கு இலவசம் ..அவர்களின் இணையதள பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவுற்று விடும், பின்னர் எப்படியேனும் சிறப்பு அனுமதி சீட்டுக்களை பெற்று உள்ளே செல்ல முடியும். வங்கதேச நாட்டுப்புறக்கலைகள் இசை விழா ஒரு வாரமும் பின்னர் சிறப்பு இசைக்கலைஞர்கள் விழா ஒருவாரமும் நடைபெறும்..சென்ற வருட கலைஞர்கள் பாலமுரளிகிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, மதுரை மணி, கன்யாகுமரி, ஹரிப்ரசாத் சவுராஷியா மற்றும் ஜாகிர் ஹுசைன். ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு கலைஞரின் நிகழ்ச்சி இறுதியாக நடைபெறும். இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் விழா காலை 3-4 மணி வரை நடைபெறும், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இங்கிதமான ரசிப்புடன்.. பாலமுரளி அவர்கள் வருக வருக என்ற தமிழ்ப்பாடலை படி முடிக்கையில் மணி அதிகாலை 2.30...பலத்த கரகோஷம் ஆயிரக்கணக்கான பேரிடம் இருந்தும்...


வங்கதேசத்தில், சினிமா இசை இல்லை என்பது மிக முக்கியமான விஷயம்.. ஒவ்வொரு இளைஞரோ/ இளம்பெண்ணோ / முதியவரோ, அவர்கள் மண் சார்ந்த பாடல்களையும் அதற்கான ஆடல் வடிவங்களையும் இன்னமும் காப்பாற்றி வருகின்றனர், அந்த சிறிய நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு தனியாக பாடல் வடிவங்களும் / ஆடல் வடிவங்களும் இருப்பது ஆச்சரியமான விஷயம்.. இப்போதும் மிக இயல்பாக அலுவலக / சுற்றுலா மற்றும் குடும்ப கூடல்களில் அவர்களின் தனித்துவமான பாடல் வடிவங்கள் பிரவாகமாக பெருகுவதை அவர்கள் அதை பெருமிதத்துடன் நிகழ்த்துவதை பொறாமையுடனும் / மனவேதனையுடனும் / இயலாமையோடும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன்..என் மண் சார்ந்த ஒரு ஆடலை / பாடலை தெரிந்து கொள்ளவோ அதை எதிர்கொள்ளும் சூழ்நிலையோ பெரும்பாலான மக்களுக்கு நம் மண்ணில் வாய்ப்பதில்லை.


நமக்கு சினிமா பாடல்கள் பிடிக்கும், அதை ஒரு இசை வடிவமாக மட்டும் கருதாமல், அதை மட்டுமே இசையின் வடிவமாக கருதிக்கொண்டு நாம் செய்த காரியம் என்ன தெரியுமா, நமது பண்பாட்டின் முதுகெலும்பின் ஆதாரத்தை அடித்து உடைத்து விட்டிருக்கிறோம்..இது இன்று நேற்றல்ல, கடந்த 70 வருடங்களாக, திரைப்பட வடிவம் காலூன்ற தொடங்கியதில் இருந்து வேகமாக நடந்து முடிந்திருக்கிறது. ஒரு பண்பாட்டின் அல்லது கலாச்சாரத்தின் முக வடிவங்களாக பார்க்கப்படுவது/ பரப்பப்படுவது / கடத்தப்படுவது  சில குறியீடுகள் மட்டுமே. உணவு, உடை,  இலக்கியம் மற்றும் இசை ஆகியன அதில் மிக முக்கியமானவை.
நமக்கு நமது கலாச்சாரம் / பண்பாடு என்ன என்பது தெரியுமா என்பதே கேள்விக்குறி.. ஆனாலும் குடும்ப அமைப்பும், சாதி அமைப்பும் / சமூக அமைப்பும் விடாமல் பிடித்து வைத்திருக்கிற சில நேர்மறை கலாச்சார குறியீடுகள் கூட நமது இசையில் (இசையை பற்றி மட்டும் இப்போது பேசுவோம்) அது கலந்த பாடலில் (இயல்)எதிரொலிக்கிறதா என்ற கேள்வியை இந்த பதிவைப்படிக்கப்போகும் கோடிக்கணக்கான வாசகர்கள் தங்களுக்குளேயே கேட்டுக்கொள்ளவும்.


கடைசியாக நீங்கள் கேட்ட எந்த பாடல் உங்கள் வாழ்க்கையை / கலாச்சாரத்தை / பண்பாட்டை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்வது போல் இருந்தது?? நமது குழந்தைகள் மிக அதிக சந்தர்ப்பங்களில் சினிமா பாடல்களைத்தான் கேட்டு வளரும் சூழ்நிலை உள்ளது.. அப்படியானால் நீங்கள் உங்கள் சந்ததியை எந்த கலாச்சாரத்தில் வளர்க்க விரும்புகிறீர்கள்? காதல்,காதல்,காதல் தோல்வி, குத்து (பெரும்பாலும் ஆபாசக் குத்து), மீண்டும் காதல் ... இது தான் ஒரு படத்தில் 5 பாடல்கள் இருந்தால் அதன் வரிசைக்கிரமம் (கெரகம்)...அதில் நல்ல கவிதை வரிகள் வரலாம், நல்ல இசைக்கோர்ப்பு இருக்கலாம், நன்றாக படமாக்கப்பட்ட பதிவாக / பாடலாக இருக்கலாம், நமது நிஜ வாழ்வில் / நாம் கடைப்பிடிக்க நினைக்கும் கலாச்சாரத்தின் எந்த படிமம் அதில் இருக்கிறது,
இது நம் இசையா ???
இது தான் நம் இசையா???
இது நம் இசை தானா???
இது மட்டும் தான் நம் இசையா, ஏனென்றால் வேறு இசை ஒலிகளையே நம்மால் கேட்க முடிவதில்லையே, இது ஒரு கலாச்சாரத்தின் மரணம் இல்லையா ???
அது இயற்கை மரணம் தானா? இல்லை, சிந்தனை செத்துப்போன கோடிக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு கலாச்சாரத்தின் கழுத்தை நெரித்து விட்டோமா ???


நாகஸ்வரம் என்றொரு வாத்தியத்தின் ஒலி, தமிழின் மங்கள வாத்தியம், உலகின் மிகப்பழமையான காற்று ஒலி வாத்தியக்கருவி, கடைசியாக அதன் இசையை எப்போது கேட்டோம் .. ஆனால் நாம் தினந்தோறும் இசை கேட்கிறோம் ..
சரி, நல்ல கவிதை வரிகள் உடைய பாடல்களையே எடுத்துக்கொண்டாலும் அதில் எத்தனை வரிகள் நமது வாழ்வின் ஏதேனும் ஒரு நிலையில் நமது கலாச்சாரத்தை காட்டுகிறது...
எப்போதேனும் சினிமா சாராத நல்ல இசை கேட்க முயற்சி எடுத்துக்கொண்டோமா, நாம் சென்னையிலோ கோவையிலோ திருச்சியிலோ / பெங்களூரிலோ (இது இப்போ பாதி தமிழ்நாடு ஆயிடுச்சி)வசித்து வந்தாலும் நமது சொந்த பூமியின் அடையாளமாக ஏதேனும் இசை அல்லது ஆடல் பாடல் இருக்கிறதா ...அதை நமது அலுவலக / பள்ளி / கல்லூரி / குடும்ப / சுற்றுலா கூடல்களில் / விழாக்களில் ஆடிப்பாட முடியுமா / கேமரா வைத்துள்ள / குறும்படம் எடுக்கும் ஆசையுள்ள நண்பர்கள் சிறிய அளவில் நமது இசையின் கலாசார வடிவங்களை ஆல்பம் போலாக்கி யூடியூப்பில் பதிவு செய்ய முடியாதா? நல்ல சுவாரசியமாக செய்தால் hits வராதா ?? முயற்சி செய்து பார்க்கலாமே!!!! முடிந்த வரை செய்யுங்கள் .. குழந்தைகளிடம் சொல்லுங்கள் ...நாம் பார்க்கும் / கேட்கும் சினி இசை, டிவி விளம்பரம் போல ஒரு கமர்சியல் / வியாபார நோக்க இசை ..நமது பண்பாட்டு இசை இதோ இங்கே என்று கூகிள் செய்து காட்டுங்கள்..உங்கள் நகரில் அருகில் நிகழ்ச்சிகள் நடந்தால் தவற விடாதீர்கள் ..நமது கோயில்களில் / திருமணங்களில் வாசித்து முடித்து உட்கார்ந்திருக்கும் தவில் / நாகஸ்வர / ஜால்ரா (இது ஒரு இசைக்கருவி, சரியான சமயத்தில் சுருதியோடு தட்டவேண்டும், தவறான அர்த்தத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று) வித்வான்களிடம் ஈகோ இல்லாமல் பேசுங்கள், முக்கியமாக குழந்தைகளிடம் அந்த வாத்தியங்களை பற்றி சொல்லுங்கள். இது அந்த வித்வான்களின்  உற்சாகத்தை அதிகரிக்கும்..ஒரு கலை காப்பாற்றப்படுவது சின்ன சின்ன செய்கைகளாலும் நடக்கும். இனி களத்தில் நடக்கட்டும்....



Monday, October 31, 2016

அரசியல் பேச்சு





சமீப காலங்களில் பார்த்த அரசியல் பேச்சுக்களில், முக்கியமாக அரசியல் அனலாய்ப்பறக்கும் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களில் இவருடைய பேச்சு சிறந்த பேச்சுக்களில் ஒன்று  என்று இவருடைய பேச்சை கவனித்து வருபவர்கள் சொல்லிவிட முடியும்..


உங்கள் மனங்கள் மோடியில் ஆரம்பித்து ஜெயலலிதா, ஸ்டாலின் வழியாக விஜயகாந்த் வீட்டுக்கெல்லாம் போய் சீமானிடம் சென்று குழம்பி நிற்பது தெரிகிறது.. உங்கள் மனதை ஒரு விமானத்தில் ஏற்றி அமெரிக்கா வரை சென்று நிறுத்திவிட்டு சற்றே சுற்றிப்பாருங்கள் ...


இவர் ஒரு முழு நேர அரசியல்வாதியல்ல, இருந்தாலும் அவருக்கு தார்மீக அரசியல் பொறுப்பு இருக்கிறது என்பதற்காக அவர் பேசிய பேச்சின் சாரம் தான் மிக நல்ல உதாரணத்தை நமக்கும் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கும் விட்டுச்சென்றிருக்கிறது., நம்மூர் அரசியலின் மையப்புள்ளி சுற்றும் இடம் எப்போதுமே வேறு தான்..இருந்தாலும் இந்த மாதிரி பேச்சை எல்லாம் சிலபஸில் வைத்தால் ஒரு நாள் பாஸாகிவிடமாட்டோமா என நப்பாசை தான்.


மிச்செல் ஒபாமா தான் அந்த பேச்சாளர் .. கீழே அவருடைய பேச்சின் யூடுயூப் இணைப்பைக்கொடுத்துள்ளேன்.. நேரமிருப்பவர்கள் முழுப்பேச்சையும், நேரமில்லாதவர்கள் 5 ஆவது நிமிடத்தில் இருந்து சில நிமிடங்களுக்கு மட்டுமாவது கேளுங்கள்.


பேசுவதில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த வீடியோவை பரிந்துரையுங்கள்.


ஹிலாரிக்கு ஆதரவாக பிரச்சாரம், டொனால்ட் டிரம்ப் அருவருக்கத்தக்க வகையில் பேசிய ஒலி நாடாவின் மீதான விமர்சனம் இது தான்  பேச்சின் சாரம், அவர் எப்படி மேடைக்கு வருகிறார், அந்த விரைவு வினாடிகளில் எவ்வாறு கூட்டத்துடன் தான் ஒன்றிப்போகிறார், சிரித்த முகத்துடன் கையசைத்து ஹாய் சொல்லி எவ்வளவு விரைவாக உணர்ச்சிகரமான, ஒரு ஒருங்கிணைக்கக்கூடிய விஷயத்தை அவர் கையாள்கிறார் என்பது எல்லாம் முதல் இரண்டு நிமிடங்களிலேயே நிகழ்ந்து விடுகிறது.. நம்மூர் போல மேடையில் வீற்றிருக்கும் என ஆரம்பித்து அரைமணிநேரத்தை செலவு செய்யும் பழக்கம் இல்லை.. ஒற்றை மைக்குடன் ஒரு போடியம் அப்புறம் சுற்றிலும் நன்கு நெருங்கிய தொலைவிலேயே மக்கள்.. மொத்தமே அரைமணிநேரம் தான் சமயம்..அதற்கு அப்புறம் கூட்டம் நிற்காது.. அதற்குள் நினைத்து வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும் ...


டிரம்ப்பின் மீதான விமர்சனத்தை மிகவும் நாகரீகமாக, நடுத்தர வர்க்க அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்வின் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளை மையமாக வைத்து கையாள்கிறார்..நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மிக சாதுரியமாக என் வீட்டில் உள்ள ஆண்கள் இவ்வாறு பேசமாட்டார்கள் என்று சொல்வதன் மூலம், நானும் உங்களைப்போல ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் தான் என்று கூட்டத்தின் நடுவே தன்னை இருத்தி சட்டென்று கூட்டத்தை தனக்குப்பின்னால் வரச்செய்து, தான் அவர்களுக்கு எதிராக நின்று பேசவில்லை, ஆனால் அவர்கள் முன் நின்று அவர்கள் சார்பாக பேசுகிறேன் என்ற உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெறுகிறார். 


டிரம்ப் பேசிய பேச்சின் சாரத்தை என்ன தான் ஹிலாரி பெண்ணாக இருந்தாலும், அவர் எதிர்த்து பேசும் போது அதில் அரசியல் தான் தெரியும், ஆனால் மிச்செல் ஒரு பெண்ணாக இருப்பதும், அவர் ஆப்ரிக்க பின்னணி கொண்டவராக இருப்பது இயல்பான நடுத்தர வர்க்க தோற்றத்தை தருவதும் இந்தப்பேச்சின் வெற்றிக்கு முக்கிய காரணம், இருந்தாலும், இந்தபேச்சில் அவருடைய ஆளுமையும், பேச்சுத்திறமையும் பெரிதாக வெளிப்பட்டு ஒரு முக்கிய திருப்பத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேணும்.


கோச் எல்லாம் வைத்து பயிற்சி எடுத்துக்கொண்டாலும் பேச்சுக்கலை ஒரு வரம் என்பது உண்மைதான் இல்லையா.. அப்படிப்பார்த்தால் நம் நாட்டின் இரண்டு முக்கியமான வாரிசுகளான ராகுலும், ஸ்டாலினும் கூட கடந்த தேர்தல்களுக்காக கோச் எல்லாம் வைத்து காசைகாரியாக்கினார்கள் என்று சொல்கிறார்கள், ஒரு ஆள் பண்ணினது ஆள் இந்தியா காமெடி என்றால் இன்னொன்று கிட்டத்தட்ட உள்ளூர் காமெடியை தொடுகிற வரை போனது.. பாட்டு பாடினது, அம்மா கால் சென்டருக்கு போன் போட்டது எல்லாம் இந்த வகையறா தான்..


ராகுல், ஸ்டாலின் இருவருமே தயக்கங்கள் நிறைந்த ஆளுமைகள்..ஒரு நல்ல தருணத்தில் அவர்களை எளிதாக கார்னர் செய்து விடமுடியும் என்பது அவர்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும், அவர்களின் பெற்றோர் புண்ணியத்திலும், கட்சிப்பாதுகாப்பிலும் தில்லாக சுற்றி வருகிறார்கள் ..


மறுபடியும்,விமானத்தைஅமெரிக்காவுக்குத்திருப்புவோம்,  இப்படி டிரம்ப்பை  காலி செய்து விட்டு, அவர் அப்பாடா ஆளை விடுங்கள் என்று கிளம்ப வில்லை இனிதான் அஜெண்டா வே எனபது போல் ஆரம்பிக்கிறார்.. அதில் என்னைக்கவர்ந்த ஒரு வரி, ஹிலாரியை ஒரு மிகச்சிறந்த தாய் என்று விலாவரியாக சொல்கிறார்.. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சப்பைக்கட்டு போல தெரிந்தாலும், யோசித்துப்பாருங்கள், கடந்த எட்டு வருடமாக ஹிலாரி ஒரு செனட்டர், வெளியுறவுத்துறை அமைச்சர், அதற்க்கு முன்னால் ஒரு எட்டு வருடம் ஜனாதிபதியின் மனைவி, அதற்கும் முன்னால்  கவர்னரின் மனைவி என வாழ்வின் முக்கியமான தருணங்களில் முழு நேர வேலைப்பளுவுடனான வாழ்க்கை தான் அவருடையது .. அவர் மகள் செல்சியா பிறக்கும் போதே கிளிண்டன் ஆர்கன்சாஸ் கவர்னர்... ஆனால் அவர் தன் மகளை ஸ்டான்போர்ட், ஆக்ஸ்போர்ட போன்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்து டாக்டர் பட்டம் வரை பெறுவதற்கு  துணை நின்றிருக்கிறார்...நமக்கே தெரியும்..இந்த பல்கலைக்கழகங்களில் அரசியல் செல்வாக்கு எல்லாம் செல்லாது என்று.. அமெரிக்காவில் மட்டுமல்ல நம் நாட்டிலும் ஏன் உலகின் பெரும்பகுதிகளில் இது ஒரு சிறந்த விஷயம், பெரும் பதவியில் இருந்த எந்த அரசியல் வாதியின் பிள்ளைகள் நல்ல கல்வி பெற்று அதன் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் ... நம் தமிழ்நாட்டில் நமக்கு இருக்கும் ஒரே எடுத்துக்காட்டு பெரிய குடும்பம் தான்.. அந்த வீட்டுப்பிள்ளைகளின் படிப்பு மற்றும் தகுதி நமக்கு தெரிந்தது தான். மேலே இந்திரா குடும்பத்தில் எல்லாமே சந்தேக கேஸிலேயே இருக்கிறது..இந்த நிலையை அங்கு பொருத்திப்பாருங்கள்.


இப்படி ஹிலாரியின் எந்த தாக்கத்தை தூக்கிப்போட்டால் மக்கள் கப்பெனப்பிடித்துக்கொள்வார்கள் எனத்தெரிந்து சரியாக கல்லை வீசுகிறார் மிச்செல், எல்லா பெற்றோருக்கும் இரண்டு கனவு கண்டிப்பாக இருக்கும், தான் பெரிய ஆளாவது, தன் பிள்ளைகளை பெரிய ஆளாக்குவது ...இரண்டுமே ஹிலாரி விஷயத்தில் இருப்பதை மிச்செல் சரியாக பயன்படுத்துகிறார் ..


அடுத்து முக்கியமான அஸ்திரம், அமரிக்காவின் வாக்கு சதவீதம், என்ன தான் படிப்பறிவு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை என்று பேசினாலும், ஓட்டு போட எந்திருச்சு வாங்கப்பா என்று சொன்னால் அமெரிக்கர்கள் பேசிக்கலி சோம்பேறி தான், அவர்கள் வாக்கு பதிவு சதவீதம் 40-50 என்ற வீதத்தில் தான் இருக்கும், ஒபாமா ஜெயித்ததே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என குறைந்தவித்தியாசத்தில் தான்.. அதை மனதில் வைத்து வெளிப்படையாக உண்மை எல்லாம் பேசி, ஒபாமா 66 வாக்குகள் வித்தியாசத்தில் எல்லாம் வென்றார் என்று சொல்லி.. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று மக்களை கட்டி இழுக்கிறார் ... என்ன தான் டெலி ட்ரான்ஸ்மிட்டர் இருந்தாலும் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்த பேச்சு போல எங்குமே தெரியாமல் (இதில் மோடி நன்றாக ஸ்கோர் செய்வார்) பேசி கேட்பவர்களை வசியப்படுத்துகிறார்.


மற்ற படி, செய்வீர்களா செய்வீர்களா என பேசுவதை கேட்டு புளித்துப்போன காதுகளுக்கும், ரோபோட் போல ஆடாமல் அசையாமல்  "உட்கார்ந்து" ஒரு சுவாரசியமும் இல்லாமல் பேசுவதை (வைகோ, விஜயகாந்த்  எல்லாம் விதிவிலக்கு) பார்த்து சலித்த கண்களுக்கும், கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க/ கேட்க  நினைத்தால் மிச்செல்லின் பேச்சைப்பார்க்கலாம் / கேட்கலாம்.


https://www.youtube.com/watch?v=SJ45VLgbe_E
   

Tuesday, October 11, 2016

பின்னுருளும் நினைவுச்சக்கரம்



தமிழ் பண்டிகை மரபில் என்று சொல்ல முடியா விட்டாலும் தமிழ் விடுமுறை மரபில், தைத்திருநாளுக்குப்பின் அதிக நாட்கள் விடுமுறை பெற்றுத்தரும் பண்டிகை ஆயுதபூஜை / விஜயதசமி ஜோடி தான்..குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தான் என்றாலும் ஏதேனும் ஒரு வாரக்கடைசியுடன் இணைந்து நான்கு நாட்கள் வரை பெற்றுத்தரும் ஒரு அட்சய விடுமுறை தான் ஆ.பூ / வி த.  அப்புறம் என்ன அட்சய திருதியை மட்டும் தான் சொல்லனுமா.. அட்சய விடுமுறைன்னு சொன்னா  விடுமுறை பெருகுங்க ..சும்மா ஸ்கூல் பசங்க கிட்ட அடிச்சு விடுங்க, அடுத்த வருஷம் இது ட்ரெண்ட் ஆயிரும் ...


 என்னுடைய பெரும்பகுதி பள்ளிப்பருவம் முழுவதும் லாரி (இதுக்கு என்னாங்க தமிழ்ப்பேரு) அலுவலகங்கள் நிறைந்த கோவையின் மையப்பகுதியில் தான் வசித்து வந்தோம் ...


என்னதான் ஆயுதபூஜைக்கு வெள்ளை அடித்தல், சுத்தப்படுத்தல், ஜிகினா காகிதம் கட்டி பூஜை ஏற்ப்பாடுகள்  செய்வது என அப்பாவின் கடையில் வேலை பெண்டு நிமிர்ந்தாலும் தொடர்ந்து வரும் விடுமுறைகள் (அப்பாவின் கடைக்கும் சேர்த்து ) ஒரு உற்சாக ரத்தம் பாய்ச்சிக்கொண்டே இருக்கும் .


அங்குள்ள லாரி உரிமையாளர்கள் ஆயுதபூஜை தினத்தன்று இரவு பூஜைக்கு பிறகு அந்த பகுதி சிறுவர்காலை எல்லாம் லாரியின் பின்பகுதியில் ஏற்றிக்கொண்ட ஒன்றிரண்டு சுற்று சுற்றி இறக்கி விடுவார்கள், ஒரு வயது வரை அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்தது ..எல்லா முறையும் செல்வதற்கு வீட்டில் அனுமதி கிடைத்ததில்லை ( நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு )...அதனாலோ என்னமோ ஒரு லாரியின் பின்னால் ஏறிச்செல்வதற்கான  ஆசை இன்னமும் மனதில் இருக்கிறது ..


மறுநாள் எல்லா கடைகளும், போக்குவரத்தும் மூடி முடங்கி விடுவதால்.. மொட்டை மாடியிலும் வீட்டின் இரண்டடி நடைபாதையில் விளையாடிக்கொண்டிருந்த அஸாருதீன்களும் , ஆலன் பார்டர்களும் வீதிக்கு வந்து விடுவோம்  .. அந்த வீதியில் வந்து முழு சுதந்திரத்துடன் விளையாடுவது ஏதோ வான்கடே மைதானத்தில் விளையாடுவது போல ஒரு சாதனை உணர்வு கொடுக்கும்....வழக்கம் போல ஏதோ ஒரு வீட்டின் சன்னல் கண்ணாடியோ, ஓடோ உடைந்ததும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும், இது போக இன்னும் சில சோக முடிவுகளும் உண்டு.. கருப்பாய் ஒருபுறம் ஓடுகிறதா இல்லையா என்ற சந்தேகம் வரவைக்கும் சாக்கடையில் விழுந்து இடது கையின் இரண்டு விரல்களால் மட்டும் பலமுறை மீட்டெடுக்கப்பட்ட ( எந்த விராட் கோலி அடித்தாரோ அவரே தான் சாக்கடையில் இருந்து எடுக்கவேண்டும்..ரூல்ஸ் ) அந்த தேய்ந்து போன 50 பைசா பந்து எங்காவது எடுக்க முடியாத இடத்தில் சென்று விழுந்து, மாற்று பந்தும் அடுத்த 50 பைசாவும் இல்லாமல் ஆட்டம் டிராவில் முடித்து வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு..


இது போல எந்த போக்குவரத்தும், தொந்தரவுகளும் இல்லாத வான்கடே மைதான தெரு இது ஆயுத பூஜை முடிந்த நாளிலோ அல்லது ஏதேனும் ஒரு பாரத் பந்த் நாட்களிலோ தான் கிடைக்கும்... எனவே ஆயுதபூஜை விஜய தசமி க்கு மனதில் தனி இடம்..


இது போக ரகசியமாக இன்னொரு கூத்தும் பண்ணுவேன். எந்த பாடத்தில் வீட்டுப்பாடம் எழுத சொன்னார்களோ, அந்த புத்தகம் நோட்டை கொண்டு வந்து பூஜைக்கு வைத்து தெளிவாக சந்தன குங்குமம் வைத்துப்பார்ப்பது...


பின்னர் வீட்டுப்பாடம் செய்யாமல் போய் ..சார் மறுபூஜை இன்னிக்கு தான் பண்ணினாங்க அதான் வீட்டுப்பாடம் செய்ய முடியல என்று புளுகி...அதெல்லாம் இருக்கட்டும் நீ கைய நீட்டு என்று வாத்தியார் வெளுத்த சம்பவங்களும் நடந்தது.. ஆனால் இந்த கோல்மால் வேலைகளெல்லாம் எப்படி 10-12 வயதுக்குள்ளேயே என் பிஞ்சு மனதில் தோன்றியது என்று இப்போது வியந்து பார்க்கிறேன்..


 ஆனால் இந்த புராணத்தின் கருத்து (moral of the story )என்னவென்றால் , என் வயதில் நான் பார்த்த என் வயதொத்த சகோதரர்களும், நண்பர்களும் வாழ்வின் விழுமியங்களோடு (வேல்யூஸ் னு தமிழ் ல சொல்வாங்க) வளர்ந்தோம் என்று தோன்றுகிறது, அது அருகே இருக்கும் ஒரு வயதானவருக்கு உதவுவதில் இருந்து, பெரிய அளவில் பொய் பித்தலாட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது வரை ஒரு தனி மற்றும் சமூக ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் அவை.. பின்னர் அவற்றை எங்கே தொலைத்தார்கள் என்று தெரியவில்லை..பின்னர் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டினோமோ அந்த அஸ்திவாரங்களில் நமது விழுமியங்களைப்புதைத்து விட்டோமோ ...

Tuesday, September 27, 2016

உள்ளாட்சி தேர்தல்

கொள்கைகளையும், வளர்ச்சியயும் பற்றி பேச சொன்னால் தனிமனித தாக்குதலில் தான் முடிகிறது,

அவர்கள் செய்த ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்களையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பையும் பார்த்தால் தலை சுற்றுகிறது,


ஒருபக்கம் பார்த்தால், உழைப்பு சுரண்டல், போலி திவால் அறிவிப்பின் மூலம் வங்கிகளை ஏமாற்றி ஊழல்,


மறுப்பக்கம் பார்த்தல் பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிப்பதற்க்காக சட்டத்தை வளைத்த குற்றசாட்டு, ஆதாரங்களை அழித்த குற்றசாட்டு,


சாதிப்பாகுபாடுக்கு சற்றும் குறைவில்லாத இனப்பாகுபாடு, அதன் விளைவான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,


காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை, காவல்துறையின் பயிற்சி குறைபாடு, மக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் பற்றிய பிரச்சினை, ஆயுத கலாசாரம்,


வேலை இழப்பு, வேலை இல்லா திண்டாட்டம், நிறுவனங்கள் வெளியேறுதல், வெளிநாட்டுப்பொருட்களின் ஆதிக்கம்,


பல வருடம் ஆட்சியில் இருந்த பின்னும் வளர்ச்சி பற்றி திட்டம் தீட்டுவோம், வறுமையை ஒழிப்போம், வேலை வாய்ப்பு பெருக்கப்படும் போன்ற பேச்சுக்கள்,


இணைய குற்றங்கள், தேச பாதுகாப்பில் மக்களுக்கு நம்பிக்கையில்லாத நிலை,


உள்நாட்டுக்கடன் அதிகரிப்பு, வெளிநாடுகளில் செலவு செய்யும் நிலை,


பொய்க்குற்றசாட்டுகள், தனி மனித தாக்குதல், பேச்சு மாற்றிப்பேசுதல்


இப்படி பல விஷயங்கள் நம்மூரு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் அளவுக்கு இருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார விவாதம் கார சாரமாக, பார்க்கும் விதத்திலும், பெரும்பாலும் கோட்பாடு அடிப்படையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தாலும் ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியுடனும் இருப்பது போல பல கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கொண்டுள்ளது,


இருந்தாலும், இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை நமது தேர்தலில் ஒப்பிட்டு பேசி நமது தேர்தல் முறையை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றது..


அமெரிக்கா போல அல்லாமல், நமது நாட்டில் தனி  மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர பிரதமரின் பங்கு மிக மிக குறைவு.. உண்மையாகவே சொல்லப்போனால் நதி நீர் பிரச்சினை போன்ற பெரிய பிரச்சினையிலும் கூட பிரதமரின் சட்டப்பூர்வ அதிகாரமோ அல்லது ஆர்வமோ பெரிதாக இல்லை.. நேரு காலத்திலும் இது தான் நடந்தது, அவரை பெரிதாக விமர்சித்து பதவிக்கு வந்த மோடி காலத்திலும் அதே தான்..


ஒரு சிறந்த பிரதமரின் காலத்திலும் மோசமான முதல்வர்களை கொண்டிருந்த, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த மாநிலங்கள் மோசமான வளர்ச்சியைதான் சந்தித்து வந்திருக்கிறது..


ஏன் கிட்டத்தட்ட 5 பிரதமருக்கு மேல் நாட்டுக்கு தந்த உ பி யில் வளர்ச்சி தமிழ்நாட்டை விட எப்போதுமே குறைவு தான்.. நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை தரும் மகாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ இருந்து எந்த பிரதமரும் வரவில்லை, இந்த மாநிலங்களின் நிலைக்கு எந்த பிரதமரும் நேரடியாக காரணமில்லை,


உண்மையில் நமது வளர்ச்சி, முதல்வர், எம் எல் ஏ, கவுன்சிலர், சில விஷயங்களில் எம் பிக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், நல்ல இடைநிலை கீழ்நிலை அதிகாரிகள் என எல்லாரிடமும் இருக்கிறது,


இவ்வளவு நேரம் முக்கி முக்கி அமெரிக்க வரை எக்ஸாம்பிள் சொல்லி இந்த பதிவை எழுத காரணம், உள்ளாட்சி தேர்தல் வருகிறது.. கட்சிக்கு இங்கே வேலை இல்லை, அந்த பகுதி மக்களின் நம்பிக்கை பெற்ற நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் .. மோடி பிரச்சாரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இங்கே தனி ம்னிதர்களுக்கு , நல்ல மனிதர்களுக்கு கொடுங்கள் ...வளமான பஞ்சாயத்து ராஜ் வளமான இந்தியாவுக்கு அடிப்படை ...மனதில் வைத்து வாக்களியுங்கள் ...



வலி மிகுந்த பதிவு ஒன்றை பொன்ராஜ் பதிவிட்டிருந்தார்., அரிக்காமேடு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு அல்ல.. ஈரோடு அருகே உள்ள கொடுமணல் ஊர் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டாலும்.. iron age வகையை சேர்ந்த இது தொல்லியல் துறையால் காப்பாற்றப்படவேண்டும் ..நிதி பற்றாக்குறையால் அகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,, பாண்டிச்சேரி பல்கலையின்  ராஜன் அவர்கள் ஆய்வின் கீழ் உள்ளது.


மாமல்லபுரம் அருகே கடலின் அடியில் கிட்டத்தட்ட 12-15 அடி  உயரத்தில் 40 மீ உயரத்தில் கட்டிட கல் அமைப்புகள் உள்ளன..இது அகழ்வு செய்யப்படவில்லை அதற்கான முயற்சிகளும் ஊக்குவிக்கப்படவில்லை ..Graham Hancook இன் டாகுமென்டரியை யூ டியூபில் காண்க. இது சரியான முறையில் ஆய்வு செய்யப்பட்டால் மொத்த தமிழ்நாட்டுடன் புவி ரீதியாக இணைந்திருந்த தெற்காசிய நாகரீகத்தை கண்டு பிடிக்க முடியும்..


மரக்காணம் அருகே ஓணம்பாக்கத்தில் மெகாலிதிக் அல்லது iron age cairns circle பகுதி கல் குவாரிகளின் பிடியில் சிக்கி அழிய உள்ளது.. பாண்டிச்சேரி பல்கலையின்  ராஜன் அவர்கள் ஆய்வின் கீழ் உள்ளது. TS சுப்ரமணியன் அவர்கள் பதிவையூ டியூபில் காண்க .. மறுபடியும் நிதி இல்லாமை இங்கு ஒரு குறை..
 
ஆதிச்சநல்லூரில் 150 ஏக்கரில் 75 சென்ட் மட்டுமே அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நமது ASI ஹரப்பா பகுதியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறது ..இதில் பிரதேச அரசியல் மிகப்பெரிய அளவில் இயங்குகிறது..நிதி, ஆர்வம் பாதுகாப்பு மூன்றும் மிக முக்கியம் இப்போது ..

Monday, September 12, 2016

வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,

வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,
வழி தவறி வாய் தவறி கை  தவறி தவறிழைக்கும்
மனிதரின் தவறால்  குருதியை சேர்த்து வந்துவிடாதே  ..


ஆட்சிக்கும் அதில் வரும் மாய மாட்சிக்குமன்றி
அவர் துடிப்பது உனக்காக என்று நம்பி தங்கி விடாதே
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


உன் வழியெங்கும் மணல் சுரண்டி அகல நடக்க வழியின்றி
ஆழப்புதைத்த எம்மீது கோபம் கொண்டு இருந்து விடாதே
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


மழை தவறும் வருடம் உன்னை நினைத்து மற்ற தினம்
உன்னை மறந்து குழி பறிக்கும் மடையர் தாம் நாங்கள்
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


கோலோச்சும் மன்னருக்கும் அவருக்கு குடை பிடிப்பார்க்கும்
குடிக்கவோ குளிரவோ அன்னமோ ஆகாரமோ இல்லை பிரச்சினை
விதைப்பவனே விதையாகிப்போகும் நிலை மாற்றவேனும்
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழித்தாரில்லை
நதிக்கெல்லாம் தாயின் பெயர் , நதி தான் எங்கள் நாகரீகத்தொட்டில்
ஏட்டில் மட்டுமே படித்து வளர்ந்தோம், ஏமாந்த இந்த தலைமுறை
சோற்றுக்கு நாளை மணலை மட்டுமே தின்னும் இந்த கூட்டம்
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே ..


புத்தியிலும் இல்லை எங்கள் சக்தியிலும் இல்லை
உயிரோடு ஓடும் ஒரு நதியை உயிர் கொடுத்து காக்க ...
திராணியற்ற இந்த தமிழரின் வயிறு காய்கிறது
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே ..