பாலமுரளிகிருஷ்ணா என்ற ஒரு இசை மாமேதை சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார், அவர் ஆந்திராவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து நமது மனிதர் என அறியப்படுபவர். சரி..அவர் இசை மாமேதை, அவர் என்ன செய்தார், செய்துகொண்டிருந்தார், ஏன் அவரை கொண்டாடுகிறீர்கள் என்று, தனது பயோடேட்டாவில் hobbies / Interests = Music என்று பதிந்து வைத்திருக்கும் ஒரு கோடியே 75 லட்சம் பேரைக்கேட்டால், அவர்., ஒருநாள் போதுமா அப்படினு ஒரு பாட்டு பாடிருக்கார், அப்புறம் இன்னொரு பாட்டு கூட பாடிருக்கார், அவர் வாய்ஸ் நல்லா இருக்கும்.. என்ற பதில்கள் தான் 99 சதவீதம் வரும். இது தான் hobby மற்றும் interest என்பதன் அர்த்தம்..அவர் செய்த கர்நாடக இசை ஆராய்ச்சி மற்றும் கீர்த்தனைகள் சென்று சேர்ந்தது மிகக்குறைந்த சதவீத மக்களைத்தான்..சிறிய அளவிலான சினிமா இசை பங்களிப்பு தான் பெரும்பான்மை தமிழ் மக்களில் அவரது பிம்பம் ..
என்னுடைய பாலமுரளிகிருஷ்ணாவுடனான அனுபவம் சற்று வித்தியாசமானது, நான் அவர் கச்சேரியை கேட்டது, முற்றிலும் சம்பந்தப்படுத்திக்கொள்ள முடியாத தாக்கா நகரில்.. Bengal Music Foundation என்ற வங்க தேச அரசு அமைப்பு ஒவ்வொரு வருடமும் இசைவிழாவை நவம்பர் இறுதியில் நடத்துகிறது..இந்தியாவின் தலைச்சிறந்த கலைஞர்கள், வங்கதேசத்தின் முன்னணி கலைஞர்கள் பங்கு பெரும் இந்த ஒரு வார நிகழ்வு நடப்பது ஏதோ குளிரூட்டப்பட்ட மூடப்பட்ட அரங்கில் அல்ல.. தாக்காவின் மையப்பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில், மிகசிறப்பாக ஒளி / ஒலி வசதி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பேர் அமர்வதற்கான சிறப்பான இருக்கை வசதிகளை செய்து, அவர்களுக்கான உணவு வசதியை தனியாக அமைத்து அங்கும் இசையை தொடர்ந்து கேட்க திரைகளை அமைத்து தரும் இந்த இசை விழா முழுக்கவும் பார்வையாளருக்கு இலவசம் ..அவர்களின் இணையதள பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவுற்று விடும், பின்னர் எப்படியேனும் சிறப்பு அனுமதி சீட்டுக்களை பெற்று உள்ளே செல்ல முடியும். வங்கதேச நாட்டுப்புறக்கலைகள் இசை விழா ஒரு வாரமும் பின்னர் சிறப்பு இசைக்கலைஞர்கள் விழா ஒருவாரமும் நடைபெறும்..சென்ற வருட கலைஞர்கள் பாலமுரளிகிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, மதுரை மணி, கன்யாகுமரி, ஹரிப்ரசாத் சவுராஷியா மற்றும் ஜாகிர் ஹுசைன். ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு கலைஞரின் நிகழ்ச்சி இறுதியாக நடைபெறும். இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் விழா காலை 3-4 மணி வரை நடைபெறும், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இங்கிதமான ரசிப்புடன்.. பாலமுரளி அவர்கள் வருக வருக என்ற தமிழ்ப்பாடலை படி முடிக்கையில் மணி அதிகாலை 2.30...பலத்த கரகோஷம் ஆயிரக்கணக்கான பேரிடம் இருந்தும்...
வங்கதேசத்தில், சினிமா இசை இல்லை என்பது மிக முக்கியமான விஷயம்.. ஒவ்வொரு இளைஞரோ/ இளம்பெண்ணோ / முதியவரோ, அவர்கள் மண் சார்ந்த பாடல்களையும் அதற்கான ஆடல் வடிவங்களையும் இன்னமும் காப்பாற்றி வருகின்றனர், அந்த சிறிய நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு தனியாக பாடல் வடிவங்களும் / ஆடல் வடிவங்களும் இருப்பது ஆச்சரியமான விஷயம்.. இப்போதும் மிக இயல்பாக அலுவலக / சுற்றுலா மற்றும் குடும்ப கூடல்களில் அவர்களின் தனித்துவமான பாடல் வடிவங்கள் பிரவாகமாக பெருகுவதை அவர்கள் அதை பெருமிதத்துடன் நிகழ்த்துவதை பொறாமையுடனும் / மனவேதனையுடனும் / இயலாமையோடும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன்..என் மண் சார்ந்த ஒரு ஆடலை / பாடலை தெரிந்து கொள்ளவோ அதை எதிர்கொள்ளும் சூழ்நிலையோ பெரும்பாலான மக்களுக்கு நம் மண்ணில் வாய்ப்பதில்லை.
நமக்கு சினிமா பாடல்கள் பிடிக்கும், அதை ஒரு இசை வடிவமாக மட்டும் கருதாமல், அதை மட்டுமே இசையின் வடிவமாக கருதிக்கொண்டு நாம் செய்த காரியம் என்ன தெரியுமா, நமது பண்பாட்டின் முதுகெலும்பின் ஆதாரத்தை அடித்து உடைத்து விட்டிருக்கிறோம்..இது இன்று நேற்றல்ல, கடந்த 70 வருடங்களாக, திரைப்பட வடிவம் காலூன்ற தொடங்கியதில் இருந்து வேகமாக நடந்து முடிந்திருக்கிறது. ஒரு பண்பாட்டின் அல்லது கலாச்சாரத்தின் முக வடிவங்களாக பார்க்கப்படுவது/ பரப்பப்படுவது / கடத்தப்படுவது சில குறியீடுகள் மட்டுமே. உணவு, உடை, இலக்கியம் மற்றும் இசை ஆகியன அதில் மிக முக்கியமானவை.
நமக்கு நமது கலாச்சாரம் / பண்பாடு என்ன என்பது தெரியுமா என்பதே கேள்விக்குறி.. ஆனாலும் குடும்ப அமைப்பும், சாதி அமைப்பும் / சமூக அமைப்பும் விடாமல் பிடித்து வைத்திருக்கிற சில நேர்மறை கலாச்சார குறியீடுகள் கூட நமது இசையில் (இசையை பற்றி மட்டும் இப்போது பேசுவோம்) அது கலந்த பாடலில் (இயல்)எதிரொலிக்கிறதா என்ற கேள்வியை இந்த பதிவைப்படிக்கப்போகும் கோடிக்கணக்கான வாசகர்கள் தங்களுக்குளேயே கேட்டுக்கொள்ளவும்.
கடைசியாக நீங்கள் கேட்ட எந்த பாடல் உங்கள் வாழ்க்கையை / கலாச்சாரத்தை / பண்பாட்டை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்வது போல் இருந்தது?? நமது குழந்தைகள் மிக அதிக சந்தர்ப்பங்களில் சினிமா பாடல்களைத்தான் கேட்டு வளரும் சூழ்நிலை உள்ளது.. அப்படியானால் நீங்கள் உங்கள் சந்ததியை எந்த கலாச்சாரத்தில் வளர்க்க விரும்புகிறீர்கள்? காதல்,காதல்,காதல் தோல்வி, குத்து (பெரும்பாலும் ஆபாசக் குத்து), மீண்டும் காதல் ... இது தான் ஒரு படத்தில் 5 பாடல்கள் இருந்தால் அதன் வரிசைக்கிரமம் (கெரகம்)...அதில் நல்ல கவிதை வரிகள் வரலாம், நல்ல இசைக்கோர்ப்பு இருக்கலாம், நன்றாக படமாக்கப்பட்ட பதிவாக / பாடலாக இருக்கலாம், நமது நிஜ வாழ்வில் / நாம் கடைப்பிடிக்க நினைக்கும் கலாச்சாரத்தின் எந்த படிமம் அதில் இருக்கிறது,
இது நம் இசையா ???
இது தான் நம் இசையா???
இது நம் இசை தானா???
இது மட்டும் தான் நம் இசையா, ஏனென்றால் வேறு இசை ஒலிகளையே நம்மால் கேட்க முடிவதில்லையே, இது ஒரு கலாச்சாரத்தின் மரணம் இல்லையா ???
அது இயற்கை மரணம் தானா? இல்லை, சிந்தனை செத்துப்போன கோடிக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு கலாச்சாரத்தின் கழுத்தை நெரித்து விட்டோமா ???
நாகஸ்வரம் என்றொரு வாத்தியத்தின் ஒலி, தமிழின் மங்கள வாத்தியம், உலகின் மிகப்பழமையான காற்று ஒலி வாத்தியக்கருவி, கடைசியாக அதன் இசையை எப்போது கேட்டோம் .. ஆனால் நாம் தினந்தோறும் இசை கேட்கிறோம் ..
சரி, நல்ல கவிதை வரிகள் உடைய பாடல்களையே எடுத்துக்கொண்டாலும் அதில் எத்தனை வரிகள் நமது வாழ்வின் ஏதேனும் ஒரு நிலையில் நமது கலாச்சாரத்தை காட்டுகிறது...
எப்போதேனும் சினிமா சாராத நல்ல இசை கேட்க முயற்சி எடுத்துக்கொண்டோமா, நாம் சென்னையிலோ கோவையிலோ திருச்சியிலோ / பெங்களூரிலோ (இது இப்போ பாதி தமிழ்நாடு ஆயிடுச்சி)வசித்து வந்தாலும் நமது சொந்த பூமியின் அடையாளமாக ஏதேனும் இசை அல்லது ஆடல் பாடல் இருக்கிறதா ...அதை நமது அலுவலக / பள்ளி / கல்லூரி / குடும்ப / சுற்றுலா கூடல்களில் / விழாக்களில் ஆடிப்பாட முடியுமா / கேமரா வைத்துள்ள / குறும்படம் எடுக்கும் ஆசையுள்ள நண்பர்கள் சிறிய அளவில் நமது இசையின் கலாசார வடிவங்களை ஆல்பம் போலாக்கி யூடியூப்பில் பதிவு செய்ய முடியாதா? நல்ல சுவாரசியமாக செய்தால் hits வராதா ?? முயற்சி செய்து பார்க்கலாமே!!!! முடிந்த வரை செய்யுங்கள் .. குழந்தைகளிடம் சொல்லுங்கள் ...நாம் பார்க்கும் / கேட்கும் சினி இசை, டிவி விளம்பரம் போல ஒரு கமர்சியல் / வியாபார நோக்க இசை ..நமது பண்பாட்டு இசை இதோ இங்கே என்று கூகிள் செய்து காட்டுங்கள்..உங்கள் நகரில் அருகில் நிகழ்ச்சிகள் நடந்தால் தவற விடாதீர்கள் ..நமது கோயில்களில் / திருமணங்களில் வாசித்து முடித்து உட்கார்ந்திருக்கும் தவில் / நாகஸ்வர / ஜால்ரா (இது ஒரு இசைக்கருவி, சரியான சமயத்தில் சுருதியோடு தட்டவேண்டும், தவறான அர்த்தத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று) வித்வான்களிடம் ஈகோ இல்லாமல் பேசுங்கள், முக்கியமாக குழந்தைகளிடம் அந்த வாத்தியங்களை பற்றி சொல்லுங்கள். இது அந்த வித்வான்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்..ஒரு கலை காப்பாற்றப்படுவது சின்ன சின்ன செய்கைகளாலும் நடக்கும். இனி களத்தில் நடக்கட்டும்....