Tuesday, August 23, 2016

கோவையில் புத்தகப்பூங்கா




வாசிப்பு என்ற ஒரு விஷயம் எப்போது துவங்கியது என்று கேட்டால் ஞாபகம் இல்லை, தெரியவில்லை இப்படி தான் சொல்ல முடியும், ஆனால் வாசிப்பு சுகம் என்ன என்று கேட்டால் இன்று நாள் முழுவதும் என்னால் பேச முடியும், நாள் முழுக்க நான் பேசினா  வீட்டம்மாவே கேக்காது அப்புறம் எப்படி உங்க கிட்ட எல்லாம் பேசறது.. அது தான் இப்டி..


நம்மள்ல பாதிப்பேரு  முதன் முதல்ல படிச்ச நாவல்னா பொன்னியின் செல்வன சொல்வாங்க...நானெல்லாம் பொன்னியின் செல்வன் படிக்கிறதுக்கு முன்னாடி குப்புற படுத்து முழு ராத்திரியானாலும் பாலகுமாரன் நாவலை படிச்சிட்டு தான் தூங்குவேன்..இதனால என்னோட படிப்பு எல்லாம் பாதிச்சி ஸ்டேட் ரேங்க் சிலநூறு மார்க் வித்தியாசத்தில தவறிப்போச்சு அது வேற விஷயம் .. ஆனா பதின் வயதிலே ( அதாங்க டீன் ஏஜ் ) பாலகுமாரனின் கதைகள் கொடுத்த மயக்கத்துக்கு ஈடு இணை எத்தனை போகிமொன் விளையாடினாலும் வராதுங்க .. அந்த வயசில் உணர்ச்சிகளை எல்லாம் சரின்ர மாதிரியே பில்டப் கொடுத்து நூறு பக்கத்துக்கு மேல எழுதிட்டு கடைசில நம்ம மூளைல ஆணி எறங்குற மாதிரி கதையை முடிச்சிருப்பாரு ...அந்த கதைகளை படிச்சா ரெண்டு விஷயம் தான் தோணும்..ஒன்னு இந்த கதைல வர்ற மாதிரி உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு
எந்த தப்பும் பண்ணக்கூடாது ..இல்லைன்னா இந்தாளு மாதிரியே கதை எழுதப்பழகனும் ..எனக்கெல்லாம் ரெண்டுமே தோணிருக்கு அப்போ நானெல்லாம் எப்படி படிச்சிருப்பேன்னு பாருங்க...


16, 17 வயசில தான் பொன்னியின் செல்வன் படிக்க வாய்ப்பு கிடைச்சுது ..இன்னை நாள் வரைக்கும் தமிழ்ல அதிகமா விற்பனையான அப்புறம் அதிகமா படிக்கப்பட்ட நாவல் ரெண்டு பெருமையுமே பொ .செ  வுக்கு தான் இருக்கும்னு நெனக்கிறேன்.. அதை வாங்கிட்டு போனவங்க பாதிப்பேரு இன்னும் அதைப்படிக்கலைங்கிறது தான் இதுல சுவாரஷ்யம்.. பொ. செ பத்தியெல்லாம் சொல்லித்தெரியக்கூடாது ..கிட்டத்தட்ட மன்மதக்கலை மாதிரி அனுபவிச்சா தான் அந்த ஆனந்தம் புரியும் ..கொஞ்சமாவது தமிழின் இனிமையும், வர்ணிப்பு அழகையும், வாசிப்பு சுகத்தையும் தெரிஞ்சுக்க பொன்னியின் செல்வன் ஒரு கேட் வே ஆப் தமிழ்  வாசிப்பு..


அப்புறமா நமக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி வந்திருச்சில்ல, எடு சுஜாதா சார் புத்தகத்தை ...கை தானா சார்னு டைப் பண்ணுதுன்னா அந்த மரியாதையை படிக்க படிக்க மனுஷன் உங்களுக்குள்ள இஞ்செக்ட் பண்ணிடுவாரு..வாசிப்பனுபவத்தை உலகமயமாக்கினது சுஜாதா தான்.. இது தான்னு இல்லாம  என்சைக்ளோபீடியா அவுன்ஸ் கணக்கில ஸ்பூன்ல வெச்சு நமக்கு ஊட்டி விட்டவரு அவர் தான்.. அவர் குடுத்த ரெபெரென்ஸ் எல்லாம் கரெக்ட்டா பாலோ பண்ணி போயிருந்தோம்னா சுந்தர் லாம் நம்ம கிட்ட பிச்சை வாங்கணும் (புரியுதுங்களா, சிலேடை டிரை பண்ணிருக்கன்).. டெக்நாலஜி, எழுத்து, படிப்பு, மரபுக்கவிதை, ஹைக்கூ, அரசியல், சினிமா, சமூக ஆர்வம் முக்கியமா தமிழை அடுத்த தளத்துக்கு கொண்டு போறதுன்னு அவர் தொடாத துறைகளே இல்லை ..நான் ஒரு பிளாக் ஆரம்பிச்சு தமிழ்த்தொண்டு செய்யறது கூட அவரால தூண்டப்பட்டு தான்.. நமது பிள்ளைகளும் இதை பெற வேண்டாமா,


சுயம்பு சுயம்புன்னு சொல்வாங்களே அதுக்கு உருவம் கொடுத்து வாழ்ந்தவர் தான் ஜெயகாந்தன்..இது அறிமும் இல்ல என் பார்வை..அவர் புத்தகங்களை வாசிப்பதற்கே ஒரு தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும் .. அவருடைய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலை படித்துக்கொண்டிருக்கும் போது அவர் எழுதியிருந்த கருத்துக்களின் கனம் தாங்காமல் படிப்பதை சில நாள் நிறுத்தி வைத்துவிட்டேன் ...நமது சிந்தனையை கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்ற வைப்பதில் வல்லவர் ..

எஸ்ரா ..நம் தலைமுறை எழுத்தின் நாயகன்..கதா விலாசம் என்ற அவர் புத்தகத்தை படித்தால் கிட்டத்தட்ட மொத்த தமிழ் எழுத்துலக நாயகர்களையும் வாசித்தாற்போல் ஒரு முழுமை தோன்றும்.. இந்தியா பற்றிய அவரது தொடர் ( புத்தகமாகவும் விகடன் பதிப்பித்தது) முற்றிலும் ஒரு புதிய பார்வையை நாம் வாழும்  இந்த மண்ணின் மீது வைக்கும் ...படிக்க இனிமையான எழுத்துக்களை தர தன வாழ்நாளை செலவிடுபவர் ...


அப்புறம் முக்கியமா திருக்குறள், பல திருக்குறள்களை படிச்சு அர்த்தம் தெரியும் போது எனக்கெல்லாம் கண்ல கண்ணீர் வந்திருக்குங்க, 2000 வருஷத்துக்கு முன்னாடி எப்படிய்யா இப்டி 5000 வருஷத்துக்கும் சேர்த்து யோசிச்சீர்னு தொண்டை அடைக்கும்.. பெரிய மேனேஜ்மென்ட் படிப்பு படிச்சவங்க சொல்றத சும்மா 7 வார்த்தையிலே சொல்லியிருக்காருங்க ..இப்போ அரசாங்கம் என பண்ணனும்னு அப்பவே சொன்ன பெருமகன்.. இத நாமளும் நம்ம குழந்தைகளும் படிக்க வேணாமா


அப்புறம் கி ரா, சு. ரா, புதுமைப்பித்தன் ஜெயமோகன், சாருநிவேதிதா, வைரமுத்து லேட்டஸ்டா லீனா, க சீ சிவக்குமார்ன்னு ஏகப்பட்ட பேரு எழுத்து தமிழ்ல இருக்கு,  அப்படி இல்லைன்னா,  எங்களுக்கு டமில் எல்லாம் படிக்க வராதுன்னு சொல்ற கோஷ்டியா நீங்க அப்படியே ராமச்சந்திர குஹா, சேத்தன் பகத், அட சிட்னி செல்டன் கூட வாங்கி படிங்க பாஸ் ...படிச்சு அதுல வர்ற சுகம் தான் வாழும் போதே சொர்க்கம், முக்கியமா குழந்தைகளுக்கு படிக்கும் வழக்கத்தை சொல்லி குடுங்க ..ரொம்ப சின்ன பிள்ளைகளுக்கு கதை சொல்லுங்க ..அதுக்காகவாவது நீங்க கொஞ்சம்  படிங்க ..பத்து டிகிரி தராத அறிவை ஒரு நல்ல புத்தகம் கொடுக்க வாய்ப்பு இருக்கு...


கோவையில் புத்த திருவிழா ...நம்மூர்ல தான்  ரெண்டு மால் அத விட்டா போக இடமில்லையில்ல, குடும்பம் குட்டியோட எல்லாரும் போய் நல்லதா நாலு புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிங்க .. நம்ம எதிர்காலம் அதில தான் இருக்கு ..



Monday, August 22, 2016

செவாலியே கமல் ஹாசன் மெசேஜ்





இன்னும் ஒரு விருதுய்யா .. என்று சொல்லுமளவிற்கு தான் இருக்கிறது..ஏற்கனவே ஏகப்பட்டது வாங்கி குவித்தாகிவிட்டது ..நாளைக்கே ஆஸ்கார் கொடுத்தாலும் கூட இப்படி தான் இருக்கும் போல.. இந்த விருதுகளை எல்லாம் பத்திரமாக ( ஷோகேஸில் தான் ) வைத்து பராமரிப்பதற்கே  கமல் தொடர்ந்து படம் எடுத்து சம்பாதித்து கொண்டிருக்கணும் போல இருக்கிறது..


கொஞ்ச வருடமாக அவரை படங்களை தாண்டி கவனிப்பவர்களுக்கு ஓன்று புரியும்..அண்ணன் படம் எடுக்கும் நேரம் போக மீதி நேரங்களில் செலவு செய்வதெல்லாம் மிக உற்சாகமாக கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போல மனிதர்களுடன் தான்.. நினைத்துப்பாருங்கள் நமக்கெல்லாம் இது போல ஒரு கற்பனை இல்லையா ..ரிட்டயர்மெண்ட் வயசுல வருமானம் வரணும், நான் அக்கடான்னு கால் மேல கால் போட்டுக்கிட்டு என் பிரண்ட்ஸோட ஜாலியா இருப்பேன்..இப்படி நினைக்காத ஐடி ஆளுங்களே இல்லைன்னு சொல்வேன் ..என்ன ஒரு வித்தியாசம் , தலைவருக்கு அந்த வயசு தானே தவிர  ரிட்டயர்மெண்ட் எல்லாம் ஆகல...ஆனா இப்படி ஒரு சந்தோசமான வாழ்க்கையை வாழறதுக்கே அவரை பாராட்டணும் ...


அப்புறம் இன்னொரு விஷயம், கொஞ்ச வருஷமா உத்து கவனிச்சீங்கன்னா, அவர் போயி பேசற இடமெல்லாம் பெத்த இடம், சும்மா பிலிம் காட்டறவா எல்லாம் போக முடியாது ...நெஜமாலுமே பிலிம் காட்டறவங்க தான் போக முடியும்.. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி, கூகிள், நாஸ்காம், ஐ ஐ டி, ஐ ஐ எம் இங்கெல்லாம் அவரை பேச, குரூப் டிஸ்கஷன் பண்ண இப்படி கூட்டிட்டு போயிருக்காங்க ..


அந்த வீடியோ எல்லாம் யூடியூப் ல இருக்குது ..சமயம் கெடச்சா போய் பாருங்க .. அவரு எவ்ளோ தெளிவா அப்டுடேட் ஆ இருக்காருன்னு புரியும்.. நாம எல்லாம் அவரு படத்த பார்த்துட்டு அது சரியில்ல இது சரியில்லைன்னு சொல்லிட்டு போயிட்டே  இருக்கறோம்..ஆனா ஒவ்வொரு படத்துலயும் ஒரு ரிசர்ச் பண்ணி தான் எடுக்கறாரு .. இத்த உடுங்க ..15-20 வருஷம் முன்னாடி வந்துச்சே அபூர்வ சகோதரர்கள்னு ஒரு படம் ..அத எப்படி எடுத்தோம்னு இப்போ சாதாரணமா சொல்றாரு.. இன்னும் அந்த டெக்னாலாஜியே நமக்கு எல்லாம் புரியல (புரிஞ்சவங்க இருந்தா போன் பண்ணி சொல்லுங்க, கமெண்ட்ல திட்டாதீங்க )..இப்போ அவர் பண்றதெல்லாம் நம்ம பசங்களுக்கு தான் புரியும் போல ...


எத்தினி லாங்க்வேஜ் பேசறாரு, சினிமாவுல எத்தினி டெக்னிக் இருக்குதோ எல்லாத்துலயும் மூக்கு மட்டுமில்ல மொத்த உடம்பையும் வுட்டுருக்காரு, அசராம நல்ல நல்ல படமா எடுத்து விடறாரு ...ஆனா அவரையே இந்த நாட்டை விட்டு போறத தவிர வேற வழியில்லன்னு சொல்ல வெச்ச ஆசாமிங்க தான நாம..


என்னமோ போங்க சார்..எனக்கென்னமோ..நடிப்பை தாண்டி எவ்ளவோ சாதனை பண்ணினத்துக்கு தான் இந்த அவார்டுன்னு தோணுது...இல்லைனா ஐஸ்வர்யா ராய் மேடம்கெல்லாம் குடுத்த பிறகு இவருக்கு குடுப்பாங்களா ..அப்புறம் எவ்ளோ நாலு தான் அவரு நடிச்சதையே பாராட்டி பேசறது. நமக்கும் சலிச்சிருச்சு அவருக்கும் சலிச்சிருச்சு ..அதான் அவரே எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பூந்து கலக்கறாரு ..நாமளும் பண்ணுவோம்...செய்யற தொழிலை நேர்த்தியா அழகா விஷயம் தெரிஞ்சு புதுமையா பண்ணுவோம் ..வெற்றி தோல்வி பற்றி ரொம்ப அலட்டிக்க கூடாது முக்கியமா அந்த நாலுபேரு ( அதாங்க சமூகம் ) அது என்ன சொல்லுதுன்னு விளக்கு வெச்சு உக்காந்து கேட்டுட்டு இருக்க்கப்படாது..இது தான் கமல் இந்த விருது மூலமா நமக்கு சொல்ற மெசேஜ் ..போங்கய்யா போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க ..பாடப்புத்தகம் மட்டுமில்ல சார் எல்லாத்தையும் தான் .../





Sunday, August 21, 2016

இன்று எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்ரா) வின் முகநூல் பக்கத்தையும் அவருடைய இணைய தளத்தையும் வாசித்துக்கொண்டிருந்த போது, எழுத்துக்காகவே தனது வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் எப்படி அர்ப்பணித்துக்கொள்ள முடியும், அதுவும் அந்த அர்ப்பணிப்பு அவரது வாழ்வின் பெரும்பகுதி நேரம் அதற்க்கான பலனையே தராமல் இருந்த போது ..




இது போன்ற எழுத்தாளர்கள் தான் தமிழ் இலக்கிய சூழலை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள், பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் கூட வாங்கியே இருக்காத கோடிக்கணக்கான மக்களைக்கொண்டிருக்கிறது நமது சமூகம்..எந்த புத்தகத்தின் தாள்கள் கூடிய விரைவில் பணத்தாள்களை ஈன்றெடுக்குமோ அந்த புத்தகங்களை மட்டுமே வாங்குவதற்கு நமது சமூகம் ஆர்வம் காட்டுகிறது..




அதே சமயம் எந்த புத்தகம் பணத்தாள்களை பெற்றுத்தருகிறதோ, அந்த புத்தகத்தையும் தேவை தீர்ந்ததும் கசக்கி எரியும் கழிவறை காகிதம் போல பழைய புத்தகக்கடையில் பேரம் பேசி விற்கும் ஒரு சூழல் எங்கிருந்து பிறந்தது..




இந்திய அவசர யுகத்தின் மிகப்பெரிய தொழிலான மென்பொருள் துறைக்கு நாம் நம்முடைய பல படைப்பாளிகளை, திறமையாளர்களை, விளையாட்டு வீரர்களை, சமூக ஆர்வலர்களை பாலி கொடுத்துவிட்டோமோ என்று தோன்றுகிறது..இது அந்த துறையின் மீதான குற்றசாட்டு அல்ல, பலி கொடுத்த இரக்கமற்ற சமூகத்தின் குற்றம் மட்டுமே ...




உணவு, உடை, குடி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் காப்பி அடிக்க மேற்கத்திய நாடுகளை நாடும் நாம்...அவர்களின் வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தை கொண்டாடும் கலாச்சாரத்தையும் ( இன்னும் நிறைய இருக்கிறது)  ஏன் திறமையாக  ம(றை) க்கிறோம்..


எட்டு வயதிற்கு மேல் குழந்தைகளை வைத்துள்ள நண்பர்கள் சொல்லுங்கள் வாசிப்பு பழக்கம் அடுத்த தலைமுறையிடம் இருக்கிறதா?