Saturday, January 16, 2016

எம் தலைமுறை வாழ்வு




வற்றாத நதிகள் தாம் வணங்கு தெய்வமெனக்
கூறி வழிபாடு செய்து வாழ்ந்தோம் - அவை
வறண்டு தீர்ந்தோடிட வழி நுறு கண்டிட்டு
செயல் முடித்து சிரித்து நின்றோம்..

திணையோடு இணையான தானியம் பல கண்டு
உடலுக்கு உரமூட்டினோம் - இன்று
தின்றாலும் செரிக்காத தீங்குகள் பல தின்று
நோய் சேர்த்து நடமாடினோம்.

குயிலோடு மயிலாடும் குளிர்ந்த மரம் சேர்த்து
மனை கட்டி மகிழ்ந்து வாழ்ந்தோம் - நாமே
குருவியும் புக முடியா கான்கிரீட்டுகள் கட்டி
எம் மனையென்று இறுமாப்பு கொண்டோம்.

சூரியன் சந்திரனின் சுற்றளவு என்னவென
வான்வரை ஆராய்ந்து வாழ்ந்தோம்- இன்று
பொறியியல் மருத்துவம் படித்திட்ட பின்னாலும்
அறிவிழந்து தோய்ந்து வாழ்ந்தோம் ..

கற்காலம் முதலான பொற்காலம் வரையிலும்
வரலாறு சேர்த்து வைத்தோம்.- பின்னர்
வந்திட்ட பறங்கியர் வழி நடந்து - நம் நம்
தாத்தனின் பெயர் கூட மறந்தோம்.

மொழிதான் நம் தாயெனும், மொழிதான் நம் மரபெனும்
மூத்ததோர் சேதி உரைத்தோம்  - நாமே நம்
மொழி கூறல் இழிவென தவறாக எண்ணிட்டு
நம் குழந்தைகள் மரபழித்தோம்..

வங்கத்து நெடுகிலும் மங்கம்மாள் சாலையிலும்
மரம் சேர்த்து பாதை செய்தோம் - இன்று
சாலை அகலிக்க மரங்களை அகழ்ந்து விட்டு
பாலையில் பயணம் செய்கிறோம்.

மாடுகளையும் மரங்களையும் மட்டுமா அழித்தோம்.
மரத்துப்போன மனங்கள் கொண்டு
மனிதத்தையும் அழித்து முடித்து
அம்மணமாய் நிற்கிறோம்..

 

2 comments: