திரைப்படங்களை நிஜவாழ்வுடன் இணைத்துப்பார்க்கும் சாதாரண சினிமா ரசிகனாக இருக்கும் எந்த ஒரு தமிழ் ரசிகனுக்கும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு மறைவு பாலச்சந்தருடையது.
விரும்பாத மணமொன்று காற்றில் வருவது போல வந்து தாக்கியது அவரது மரணசெய்தி. திரைப்படங்களின் தாக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த ஒரு சாதாரண குடிமகனுக்கும் கூட இது என் கதை..என் வாழ்வில் நிகழ்ந்த ஒன்று தான் என்று எண்ணவைக்கும் அளவுக்கு படைப்புகளை அளித்தவர் அவர்.
திரையின் வாயிலாக நேர்மறைத்தாக்கம் ஏற்படுத்திய ஒரு சிலரில் பாலச்சந்தர் முக்கியமானவர். அவர் எடுத்துக்கொண்ட கதைகளின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களின் அளவு தான் அதன் நேர்மைத்திறனுக்கு அளவுகோல்.
அரங்கேற்றம் படமாகட்டும், சிந்து பைரவியாகட்டும் மனித மன உணர்வுகளை கட்டுமனப்படுத்தி சிற்பமாய் நமக்கு கொடுத்தவர் அவர்.
வேறுபடுதலும், வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும், உணர்ச்சிக்குவியல்களும், மன மாறுபாடுகளும், சமுக அவலங்களும், சமூக அளவுகோல்களும், குடும்பபிணைப்புகளும் அவற்றின் சங்கிலிப்பிடிப்புகளும் அதனாலான மூச்சுதிணறல்களுமாக அவரது திரைப்படைப்புகள் அழகுற செதுக்கப்பட்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்ததை மறக்க முடியாது.
வணிக ரீதியாலான அழுத்தம் மூச்சுத்திணற வைக்கும் திரை உலகில் ஒரு உறுதிப்பாட்டுடன் தான் எடுத்துக்கொண்ட, தான் விரும்பிய கதைக்கருக்களை மட்டும் பெரும்பாலும் படமாக்கி, பெரும்பாலும் வணிக ரீதியிலும் சமரசம் காட்டிய பாலச்சந்தர் நிச்சயமாக ஒரு முன் மாதிரி. திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்.
உன்னால் முடியும் தம்பியில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் உதயமூர்த்தியை வேண்டுமானால் நாம் நிஜ வாழ்வில் சந்திக்காமல் போயிருக்கலாம், ஆனால் தன தந்தையால் ஒரு கோணத்தில் வளர்க்கப்பட்டு, தன சிந்தனையால் மற்றொரு கோணத்தில் சிந்திக்கபழகி அதனால் உரசல்களுக்கு ஆட்படும் எத்தனையோ இளைஞர்களை நாம் நித்தம் பார்க்கிறோம். உதயமூர்த்தி வெளியேறி தன்னை நிருபித்தார். பல உதயமூர்த்திகள் தமது திறமையை வெளிப்படுத்த முடியாமல், குடும்பத்தோடு தகவமைத்துக்கொள்ள முடியாமல் தங்கள் வாழ்வின் நீட்சியை மட்டும் மேற்கொண்டு வருவது நிஜம்.
இதற்கு சற்றும் குறையாதது பரஸ்பர ஆர்வங்கள் ஒத்துப்போகாத கணவன், மனைவி விவகாரம், சிந்து பைரவி படத்தின் அடிநாதம் இசை, ஆனால் அதை உயிரோட்டமாக எடுத்து செல்வது ஜே கே பிக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஒத்துப்போகாத இசை ஆர்வம், புரிந்து கொள்ள இயலாமை அல்லது முயற்சிக்காமல் இருப்பதன் விளைவாக ஆர்வமும், ஆர்வக்கோளாறும் உள்ள இன்னொரு பெண் சிந்துவாக உள்ளே நுழைகிறாள். நிஜ வாழ்வில் பல பைரவிக்கள், பல சிந்துக்கள், பல வீடுகளில் சிந்து பாட்டில் வடிவத்திலோ அல்லது உடைந்து போன தாம்பத்தியத்தின் நடுவே விழுந்த திரை போல தான் உள்ளே நுழைகிறாள்.
வறுமையின் நிறம் சிகப்பு ரங்கா பல வீடுகளில் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அப்பாக்களின் பாட்டுக்கு பின்பாட்டு பாடிக்கொண்டு இருப்பதை சகஜமாக பார்க்க முடியும்.
அவள் ஒரு தொடர்கதை போல, அரங்கேற்றம் போல கையாலாகாத தகப்பன்களும், ஆண்மை நிரம்பிய பெண்களும் நமது சமூகத்தில் எங்கும் பரவியிருக்கிறார்கள்.
பொய்யால் நிரம்பிய ஒரு கொய்யாவை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த தமிழ் ரசிகனுக்கு அந்த கொய்யாவுடன் உப்பும் உரைப்பும் சேர்த்து உரைக்கும் படி தந்த நல்ல தோட்டக்காரன் பாலச்சந்தர்.
மேடை நாடகத்திலும், சின்னத்திரையிலும் சரியான படைப்புகளை தந்து ஒரு ராஜபாட்டையை திறந்து வைத்த ஜாம்பவான் பாலச்சந்தர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
No comments:
Post a Comment