Saturday, November 14, 2015

குழந்தைகள் தினப்பதிவு பெரியவர்களுக்காக




குழந்தைகள் தினப்பதிவு பெரியவர்களுக்காக ....

சிறு வயதிலிருந்தே நேரு என்றாலே வெள்ளை செர்வானியில் சிவப்பு ரோஜாவை பட்டனில் செருகியபடி  குழந்தைகளுடன் அவர் இருக்கும் படமும், குழந்தைகள் தினமும் தான் மனதில் படும்..

வளர வளர குறிப்பாக 2000 த்துக்கு பிறகான அரசியல் மாற்றங்கள் நேரு மீதான எதிர்மறை விமர்சனத்தை வலுவாகச்செய்தது தான் இந்த பதிவுக்கு காரணம்..

பொதுவாக அரசியல் கருத்துக்கள் தவிர்த்து என் நண்பர்கள் சிலரும் நேரு மீது கடுப்பில் (!?1?) இருந்ததுக்கான காரணம் தெரியாமல் அவரைப்பற்றி தேடிப்படிக்க ஆரம்பித்தேன். இந்தப்பதிவின் பெரும்பாலான பகுதிகள் ராமச்சந்திர குஹா வின் எழுத்தில் இருந்து கையாண்டது, ஆனால் என்னுடைய நடையில்.. இப்போது நேருவைப்பற்றி....

நவீன கால அரசியல் வாதிகள் எவருமே (உலகெங்கும்) சந்தித்திராத ஒரு இக்கட்டான சூழலில் தான் நேரு நம் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விட்டால் தலைமுழுகிப்போகும் என்ற அளவிலான பல பிரச்சினைகள் அப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.

- ஒரு சிறு நகரத்தில் மதக்கலவரம் என்றாலும் ஒரு பதற்றம் நாடெங்கும் தகிக்கிற தற்காலத்தை ஒப்பிட்டால், 1947-ல் ஆயிரக்கணக்கான கி.மீ நீளமுள்ள நமது எல்லையெங்கும் மதக்கலவரம் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது..

- நிர்வாகத்தின் அணுகுமுறை மற்றும் பிரிவினை சார்ந்த பிரச்சினைகளால் நாடு முழுக்க கடுமையான உணவுத்தட்டுப்பாடு

- ஒவ்வொரு பிரதேசத்திலும் துள்ளிக்கொண்டிருந்த 500க்கும் மேற்ப்பட்ட சமஸ்தானங்கள் மற்றும் அவற்றின் ஒன்றிணைப்பு

- ஒரு கோடிக்கும் மேற்ப்பட்ட அகதிகள் மற்றும் அவர்கள் குடியேற்றம்...

தீயோடு போராடுதல் போன்ற இந்த பிரச்சினைகள் தாண்டி நீண்ட கால நோக்கில் ஆனால் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளாக

- ஒரு சுதந்திர தேசமாக, இறையாண்மை மிக்க இந்தியாவைக் கட்டமைப்பது..

- தேர்தல் முறையை உருவாக்கி மக்களை ஜனநாயகப்பாதைக்கு திருப்புதல்

- அனைத்து தரப்பினருக்குமான அரசியல் சட்டம் மற்றும்  சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துதல்..

- பனிப்போர் காலத்திற்கு ஏற்றவாறு வெளியுறவு கொள்கை நிர்மாணித்தல்.

என நம் தகுதிக்கு  மீறிய பணிகள் இருந்தன...

ஒரு நல்ல ஆனால் சவாலான விஷயம் அவரது அமைச்சரவை சகாக்கள்.. சர்தார் வல்லபபாய் பட்டேல், ராஜாஜி, அம்பேத்கார் போன்ற அமைச்சர்களை தலைமை தாங்கி நடத்துவதும் நேரு முன்பிருந்த சவால்கள்..

சுதந்திர இந்தியாவின் முகமாக்கப்பட்டு புகழ்வதிலோ அல்லது திட்டுவதிலோ நேரு தான் முன்னிறுத்தப்படுகிறார், 50 களில் நேருவுக்கு இந்தியாவில் இருந்த புகழ் / அபிமானம் போல அதற்கு முன்னரும் அதற்குபின்னர் இன்று வரையிலும் எவர்க்கும் இருந்ததில்லை..

இந்தியாவின் ஒருமித்த தலைவனாக இந்தியாவை தன்னிச்சையாக இயங்கச்செய்ய, தன்னிறைவுள்ள நாடாக மாற்ற சுய சார்புள்ள தேசமாக கட்டமைக்க அவர் எடுத்த முயற்சிகளின் வெற்றியும் தோல்வியும் சேர்ந்தது தான் இன்றைய நமது வாழ்க்கை ...

ஜனநாயகம் என்றால் என்னவென்றே அறிந்திராத 30 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்ற 35-40 கோடி மக்கள் நிறைந்த நாட்டில் தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க மட்டுமின்றி, மக்களை தேர்தல் அரசியல் முறையில் நம்பிக்கை கொள்ள வைக்க அவர் செய்த பயணங்களின் அளவு வரலாற்றின் சிறந்த பயணங்களில் ஒன்று.. சொல்லப்போனால் யுவான் சுவாங் மற்றும் பாஹியான் ஆகியோரது பயணத்துக்கு ஒப்பாக சொல்லப்பட வேண்டிய ஒன்று..

கிட்டத்தட்ட 28000 கி.மீ வான் வழியாக , 8000 கி.மீ சாலை வழியாக, 3000 கி.மீ இரயிலிலும் ஏன் சில நுறு கி.மீ கள் நீர்வழிகளிலுமான பயணத்தை 1950 களில் கற்பனை செய்து பாருங்கள்..

தான் தூங்கிய நேரத்தை விட அதிகமாக பயணமும், பயணித்த நேரத்தை  விட அதிகமாக  பேசியும் கிட்டத்தட்ட 2 கோடி மக்களிடம் நேரடியாக உரையாடி, அதே அளவு மக்களை நேரில் சந்தித்த்துமான இந்த பயணம் ஒரு முக்கியமான அடிக்கல்..

அவருடைய பதவிக்காலத்தில் நேரு எவ்வளவோ செய்தார், ஆனால் இருந்த பதவிக்காலத்தின் கட்டாயம் அவர் இன்னும் செய்திருக்க வேண்டும் என்றே நம்மை எண்ண வைக்கிறது..

நேருவின் பதவிக்காலப் பணிகளின் மேல் நாம் சுமத்தும் எதிர் பார்ப்புகளை வேறு எந்த பிரதமரின் மீதும் சுமத்துவதில்லை..அவரால் கட்டமைக்கப்பட்ட தேசத்தில் உயர்வு பெற்ற தலைமுறையினராக நாம் நமது அளவுகோல்களின் தரத்தை உயர்த்தி அவரது பணியை நிறுத்து பார்ப்பது அவரது வெற்றி மற்றும் பலவீனம்..

இதை தாண்டி காந்திக்கும் நேருவுக்கும் இடையேயான வித்தியாசம், காந்தியை அவர் காலத்தில் விமர்சித்த அறிவு ஜீவிகள் அவர்க்குப்பின்னால் அவர் கொள்கைகளை தூக்கிப்பிடித்து பாராட்ட ஆரம்பித்தனர்..நேருவுக்கு அவர் காலத்தில் கூடவே இருந்த அறிவு ஜீவிகள் அவர் காலத்துக்கு பின் அவரை கைவிட்டுவிட்டனர்..

இது போக அவரது தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் ஒரு பெரும் கூட்டமும் இருக்கிறது, எனது தனிப்பட்ட கருத்தில் சொல்லப்போனால், உங்கள் எல்லாருடைய (எல்லாருடைய) கனவுகளின் பிம்பம் போன்ற ஒரு வாழ்வை அவர் வாழ்ந்து முடித்தார், ஒரு பெரிய பணக்கார குடும்பத்தின் இளவரசன், அயல் தேசத்தில் படித்து திரும்பிய நவீன சிந்தனையுள்ள வாலிபன்,  பெண்களால் விரும்பப்பட்ட பெருமனக்காரன், நாட்டுக்காக போராடிய ஒரு தியாகி, ஒரு நல்ல தகப்பன், சிறந்த அறிவாளி, கவர்ச்சியான பேச்சாளன் சிறந்த நிர்வாகி இந்த நாட்டில் கிருஷ்ணருக்கு பிறகு அதிகம் நேசிக்கப்பட்ட ஆண்மகன், எல்லாவற்றையும் விட குழந்தைகளால் விரும்பப்பட்ட, குழந்தைகள் விரும்பிய நேரு மாமா..உங்கள் உள்ளப்புகைச்சலுக்கு இது கூட காரணமாக இருக்கலாம்,

வளருங்கள் அதுவரை குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

(இது தனிமனித துதி பாடும் பதிவு அல்ல.. தரவுகளின் அடிப்படையிலான தொகுப்பு மட்டுமே )





































 

No comments:

Post a Comment