Monday, September 5, 2016

வெளியெங்கும் ஆசிரியம் ...





கற்றலும் கற்பித்தலும் கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது..சில கணங்களில் ஆசிரியர் உணராமல் பல கணங்களில் கற்றுக்கொள்ளும் மாணவர் உணராமலும் , கற்றலும் கற்பித்தலும் கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஆசிரியர் உணராமல் இருப்பது பிழையோ பிரச்சினையோ அல்ல..கற்றுக்கொள்கிறோமா இல்லையா என்று கற்றுக்கொள்ளும் மாணவர் உணராமல் போவது தான் இங்கு அதிகம் நடக்கிறது ...






இந்த ஆசிரியர் தினத்துக்கு எனக்கு முறையாக பள்ளி கல்லூரியில் பயிற்றுவித்த ஆசிரியர்களைப்பற்றி பேசப்போவதில்லை..ஏற்கனவே என்னைபோன்றவனை மாணவனாக பெற்றதின் பயனாக களைப்படைந்து அவர்கள் ஓய்ந்திருப்பார்கள்..அவர்களை சற்றே இளைப்பாற விட்டு..வேறு எங்கெல்லாம் நன்றி பாக்கி இருக்கிறதென்று பார்ப்போம்..






மனிதர்கள் மிக முக்கியம்..காணும் மனிதர் யாவிலும் நட்பு நிறைந்த ஒரு பக்கத்தை கண்டெடுத்து,  நட்பு கற்பு போல என்று நட்பிலிருந்து பிறழும் போதெல்லாம் உணர்த்தி, நட்பு  உடுக்கை இழந்தவன் கை போல எனக்கற்றுக்கொடுத்த நண்பன்...\






இன்லேண்ட் லெட்டர் இருந்த 2000க்கு முந்திய எனது பள்ளிப்பருவத்தில்..ஆங்கிலத்தில் எழுத தெரியாட்டி என்ன..தமிழையே ஆங்கிலத்தில் எழுதிப்பழகு என்று ஆங்கிலத்தை அஞ்சல் வழியில் கற்றுக்கொடுத்த ஒரு சகோதரி ..






எதைசெய்ய நினைக்கிறாயோ அதை சரியாக செய்.. செய்யத்தெரியாவிட்டால் விட்டு விலகு.. முயற்சி பலன் தராத விஷயமும் ஒன்று உண்டா என கற்றுக்கொடுத்த முயற்சியால் உயர்ந்த ஒரு நண்பன்..






மோகினியாட்டம் ஆடி முடித்து களைத்த கலைஞனைப்போல பதின் பருவ முடிவில், பட்டப்படிப்பு முடியும் தருணத்தில் சோர்ந்திருந்த போது, வாழ்க்கை என்பது ஒரு பயணம், களைத்து அமர்பவன் பயணிக்க முடியாது என்று ஊக்கம் எனும் அருமருந்தை ஊட்டி இன்று வரை ஓடக்கற்றுக்கொடுத்த தோழி ..






ஏதேனும் ஒன்றைப்படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று என் அறியாத வயதிலேயே படிப்பித்த என் தந்தை




இன்னும் எனக்கு ஆறோ எட்டோ தான் வயது என்று என்னும் அளவிற்க்கு பாசத்தைக்காட்டி, அதே சமயம் அந்த வயதிற்கான அறிவு தான்  எனக்கு இருக்கும் போல என்று என்னும் அளவிற்கு இன்னும் எனக்கு புத்தி சொல்லி கற்பிக்க முயன்று கொண்டே இருக்கும் என் தாய் ...






பொறுமையின் சிகரம், சுறுசுறுப்பில் சூரியன், கோபத்தில் குளிர்நிலவு எனப்பேரெடுத்த என் போன்ற ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்க்கையில் திருமணம்  என்பது தியாகத்தின் உச்சக்கட்டம் என வாழும் பாடமாய் இருந்து, அடிப்படை வாழ்க்கை முறைகள் பலவற்றை மட்டுமில்லாமல் இவளுக்கு இதெல்லாம் தெரியுமா என என்னை தினந்தோறும் வியப்பூட்டி வம்படியாக கற்றுக்கொள்ள வைக்கும் என் இரண்டாம் தாய்... என் மனைவி...






இன்னும் எண்ணிலடங்கா என் நண்பர்கள், முகம் தெரியாமல் ஆசிரியராய் இருந்து எனக்கு கற்றுக்கொடுத்த, நான் கற்றுக்கொண்ட பல தோழர் தோழிகள், முக்கியமாக கற்றுக்கொள்ளலின் ஆகசிறந்த பயனான பொருளீட்டலில், அடிப்படை நிர்வாக அறிவிலிருந்து நிர்வாக மேலாண்மை வரை நான் கற்றுக்கொள்ள உதவியாய் இருந்து, எனக்கு கற்றுக்கொடுத்த என் சக ஊழியர்கள் மற்றும் என் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நன்றிகள் ...நீங்கள் உங்களை அறியாமலேயே என் வாழ்வில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.. நன்றி!!!!








காடும் மலையும் எந்தன் குருவே -அந்த
அணிலும் ஆடும் எந்தன் ஆசான்
ஓடும் நதியும் ஒளியும் நிலவும்
ஓய்வின்றி சொல்லுதிங்கோர் பாடம்





மேயும் முகிலும் மிரட்டும் மழையும்
கீழோடும் புல்லும் கிழக்கு கதிரும்
காயும் வெயிலும் கடலும் படகும்
கடந்தே போகும் ஒன்றை கத்திச்சொல்லி,






காலின்  கீழே அலையும் நிழலும்
காதின் அருகே சொல்லுமொரு சேதி
மாலை மங்கும் வரை தான் காலின் நிழலும்
காலம் போகுமுன்னே கடமை முடி மகனே !!!
 

No comments:

Post a Comment