தமிழ் பண்டிகை மரபில் என்று சொல்ல முடியா விட்டாலும் தமிழ் விடுமுறை மரபில், தைத்திருநாளுக்குப்பின் அதிக நாட்கள் விடுமுறை பெற்றுத்தரும் பண்டிகை ஆயுதபூஜை / விஜயதசமி ஜோடி தான்..குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தான் என்றாலும் ஏதேனும் ஒரு வாரக்கடைசியுடன் இணைந்து நான்கு நாட்கள் வரை பெற்றுத்தரும் ஒரு அட்சய விடுமுறை தான் ஆ.பூ / வி த. அப்புறம் என்ன அட்சய திருதியை மட்டும் தான் சொல்லனுமா.. அட்சய விடுமுறைன்னு சொன்னா விடுமுறை பெருகுங்க ..சும்மா ஸ்கூல் பசங்க கிட்ட அடிச்சு விடுங்க, அடுத்த வருஷம் இது ட்ரெண்ட் ஆயிரும் ...
என்னுடைய பெரும்பகுதி பள்ளிப்பருவம் முழுவதும் லாரி (இதுக்கு என்னாங்க தமிழ்ப்பேரு) அலுவலகங்கள் நிறைந்த கோவையின் மையப்பகுதியில் தான் வசித்து வந்தோம் ...
என்னதான் ஆயுதபூஜைக்கு வெள்ளை அடித்தல், சுத்தப்படுத்தல், ஜிகினா காகிதம் கட்டி பூஜை ஏற்ப்பாடுகள் செய்வது என அப்பாவின் கடையில் வேலை பெண்டு நிமிர்ந்தாலும் தொடர்ந்து வரும் விடுமுறைகள் (அப்பாவின் கடைக்கும் சேர்த்து ) ஒரு உற்சாக ரத்தம் பாய்ச்சிக்கொண்டே இருக்கும் .
அங்குள்ள லாரி உரிமையாளர்கள் ஆயுதபூஜை தினத்தன்று இரவு பூஜைக்கு பிறகு அந்த பகுதி சிறுவர்காலை எல்லாம் லாரியின் பின்பகுதியில் ஏற்றிக்கொண்ட ஒன்றிரண்டு சுற்று சுற்றி இறக்கி விடுவார்கள், ஒரு வயது வரை அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்தது ..எல்லா முறையும் செல்வதற்கு வீட்டில் அனுமதி கிடைத்ததில்லை ( நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு )...அதனாலோ என்னமோ ஒரு லாரியின் பின்னால் ஏறிச்செல்வதற்கான ஆசை இன்னமும் மனதில் இருக்கிறது ..
மறுநாள் எல்லா கடைகளும், போக்குவரத்தும் மூடி முடங்கி விடுவதால்.. மொட்டை மாடியிலும் வீட்டின் இரண்டடி நடைபாதையில் விளையாடிக்கொண்டிருந்த அஸாருதீன்களும் , ஆலன் பார்டர்களும் வீதிக்கு வந்து விடுவோம் .. அந்த வீதியில் வந்து முழு சுதந்திரத்துடன் விளையாடுவது ஏதோ வான்கடே மைதானத்தில் விளையாடுவது போல ஒரு சாதனை உணர்வு கொடுக்கும்....வழக்கம் போல ஏதோ ஒரு வீட்டின் சன்னல் கண்ணாடியோ, ஓடோ உடைந்ததும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும், இது போக இன்னும் சில சோக முடிவுகளும் உண்டு.. கருப்பாய் ஒருபுறம் ஓடுகிறதா இல்லையா என்ற சந்தேகம் வரவைக்கும் சாக்கடையில் விழுந்து இடது கையின் இரண்டு விரல்களால் மட்டும் பலமுறை மீட்டெடுக்கப்பட்ட ( எந்த விராட் கோலி அடித்தாரோ அவரே தான் சாக்கடையில் இருந்து எடுக்கவேண்டும்..ரூல்ஸ் ) அந்த தேய்ந்து போன 50 பைசா பந்து எங்காவது எடுக்க முடியாத இடத்தில் சென்று விழுந்து, மாற்று பந்தும் அடுத்த 50 பைசாவும் இல்லாமல் ஆட்டம் டிராவில் முடித்து வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு..
இது போல எந்த போக்குவரத்தும், தொந்தரவுகளும் இல்லாத வான்கடே மைதான தெரு இது ஆயுத பூஜை முடிந்த நாளிலோ அல்லது ஏதேனும் ஒரு பாரத் பந்த் நாட்களிலோ தான் கிடைக்கும்... எனவே ஆயுதபூஜை விஜய தசமி க்கு மனதில் தனி இடம்..
இது போக ரகசியமாக இன்னொரு கூத்தும் பண்ணுவேன். எந்த பாடத்தில் வீட்டுப்பாடம் எழுத சொன்னார்களோ, அந்த புத்தகம் நோட்டை கொண்டு வந்து பூஜைக்கு வைத்து தெளிவாக சந்தன குங்குமம் வைத்துப்பார்ப்பது...
பின்னர் வீட்டுப்பாடம் செய்யாமல் போய் ..சார் மறுபூஜை இன்னிக்கு தான் பண்ணினாங்க அதான் வீட்டுப்பாடம் செய்ய முடியல என்று புளுகி...அதெல்லாம் இருக்கட்டும் நீ கைய நீட்டு என்று வாத்தியார் வெளுத்த சம்பவங்களும் நடந்தது.. ஆனால் இந்த கோல்மால் வேலைகளெல்லாம் எப்படி 10-12 வயதுக்குள்ளேயே என் பிஞ்சு மனதில் தோன்றியது என்று இப்போது வியந்து பார்க்கிறேன்..
ஆனால் இந்த புராணத்தின் கருத்து (moral of the story )என்னவென்றால் , என் வயதில் நான் பார்த்த என் வயதொத்த சகோதரர்களும், நண்பர்களும் வாழ்வின் விழுமியங்களோடு (வேல்யூஸ் னு தமிழ் ல சொல்வாங்க) வளர்ந்தோம் என்று தோன்றுகிறது, அது அருகே இருக்கும் ஒரு வயதானவருக்கு உதவுவதில் இருந்து, பெரிய அளவில் பொய் பித்தலாட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது வரை ஒரு தனி மற்றும் சமூக ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் அவை.. பின்னர் அவற்றை எங்கே தொலைத்தார்கள் என்று தெரியவில்லை..பின்னர் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டினோமோ அந்த அஸ்திவாரங்களில் நமது விழுமியங்களைப்புதைத்து விட்டோமோ ...
No comments:
Post a Comment