80 களின் இசையும் வாழ்வும் என்றொரு தலைப்பில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியைப்பார்த்து முடித்தபின், எப்போதும் எழுகின்ற எண்ண அலைகள் அப்போதும் எழுந்தன. வாழ்வின் புண்பட்ட,பண்பட்ட, நெகிழ்வான, மகிழ்வான, அழகான, அகோரமான எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் 80 களில் குவிந்து கிடக்கின்றன. இந்தப்பாடலை நாம் கேட்டதில்லையே என்ற படலை ஒருவர் உணர்ச்சி மிகுதலோடு தனது வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பாடுவார் , கேட்கின்ற பாடல் காதல் பாடலோ, அல்லது வேறு பாடலோ நமக்குள் கொட்டிக்கிடக்கின்ற உணர்வுகளை தட்டி எழுப்புகின்ற மெல்லிய மணிக்கைகளை அந்தப்பாடல்கள் கொண்டிருக்கின்றன...
நிகழ்ச்சி முடிந்து உறங்கச்செல்லுமுன் குயிலே கவிக்குயிலே எனும் ஜானகியம்மாவின் குரலில் வந்த பாடலை கேட்க விரும்பினேன், நம் எண்ணங்களை இளகி ஓட வைக்கும் இயல்பு நிறைந்த பாடல்களில் இந்த பாடலுக்கு ஓரிடம் எப்போதும் உண்டு.. நான் வாய் விட்டு அழுத மிகச்சில நேரங்களில் அதுவும் ஒன்று..எந்த நினைவுகள் கண்ணீரையும் கேவலையும் தூண்டின என்று தெரியவில்லை, என் தோள் தூக்கி வளர்த்த எத்தனையோ குழந்தைகள், என் அன்புக்கும், அபிமானத்துக்கும் பிரியமான குழந்தைகளின் முகங்கள் நினைவில் வந்து போயின, எனக்கான ஒரு குழந்தை இல்லை என சொல்லிச்செல்ல...
நீண்ட நாட்களுக்குபிறகு வரும் பாலு மகேந்திராவின் பேட்டி அது என்று நினைக்கிறேன், விகடனில் வந்திருந்தது, வழக்கம் போல சினிமாவைப்பற்றி பேசி விட்டு முடிவில் முத்தாய்ப்பாக ஒரு வார்த்தை சொல்கிறார், ' பெண்களையும் காதலையும் பற்றிப்பேசினால் எனக்கு ஆயிரம் பக்கங்கள் கூட போதாது" அவருக்கு மட்டும் தானா? நம் சமூக சூழ்நிலையில் எல்லா ஆண்களுக்கும் மனதில் பெண்களைப்பற்றியும், அவர்கள் மீதான காதலைப்பற்றியும் பேசுவதற்கும் ஆயிரமாயிரம் பக்கங்களுக்கான நினைவுகள் இருக்கின்றன, எனக்கும் முந்தைய நாள் இரவில் குயிலே கவிக்குயிலே என்ற குரலில் இழைந்து உடைந்து நான் கண்ணீர் விட்டு அழுத போது குட்டியின் மனதில் எண்ண ஓடியது என்று தெரியவில்லை, பிறகு மேதுவாகக்கேட்டாள், "என்னப்பா எனன சீக்ரெட் என்று", எனன ரகசியம் எனக்கு மட்டும், உலகமெல்லாம் இருக்கும் ரகசியம் தான்.. பள்ளிக்கூட வயதில் இருந்து பெண்கள் மனதைப்பாதித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பலரது முகமும் பெயரும் கூட நினைவில் நிற்பது இல்லை..பலருக்கு நான் யார் என்பது கூட தெரியாது...அடிக்கின்ற காற்று ஆலமரத்தை கூட சாய்த்து விட்டு போகும், ஆலமரத்துக்குத்தான் அந்த காற்றும் நாளும் நினைவில் இருக்கும், அந்த காற்றுக்கு..
பெண்கள் அந்த காற்றுப்போல் இருக்கிறார்கள்.. மெல்லிய தென்றலாய் பல இதயங்களைக்கடந்து செல்பவர்கள் உண்டு, சூறாவளியாய் சுழன்றடித்து சாய்த்து விட்டு செல்லும் பெண்களும் உண்டு.. மூச்சுக்காற்றாய் நம்முள்ளே இழையோடிக்கொண்டிருக்கும் பெண்களும் உண்டு.. அவர்கள் தாயாகவோ, மனைவியாகவோ, என்றுமே நம் வாழ்வில் வர முடியாத சில பெண்களைப்போல தன்னிச்சியின்றி அனிச்சையாக பல மனங்களை பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்..
ஆண் பெண் உறவை மிகுந்த கட்டுக்கோப்பான உறவாக வைக்க முயற்சித்த நமது சமூகத்தில் பெண்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள் அல்லது அப்படிப்பார்க்கப்பட்டார்கள், மிக அழகான விசயமாகவும் அதே நேரம் மிகக்கொடுமையானதாகவும் இருக்க முடிகிற ஒரு விஷயம், பெண்கள் மனதில் காதல்,,, நம் சமூகத்தில் பெண்கள் காதல் வயப்பட்டதை கண்களாலும், சாடையாலும், உடல் மொழியாலும் சொல்லிச்செல்லும் பொது அழகாக தெரிகிற ஒரு விஷயம், அதே பெண்கள் குடும்ப, சமூகக் காரணங்களுக்காக அந்தக்காதலை புதைத்து விட்டுச்செல்லும் போது, அவள் காதலை உணர்ந்த ஒரு ஆணின் வாழ்வில் ஒரு கணமேனும் கொடூரமான விசயமாக மாறி விடுகிறது. இதையெல்லாம் தாண்டி என் உரிமைகளைச்செலுத்த இயலுகின்ற, எனக்கே எனக்கனவளாய் நான் நினைக்க முடிகின்ற ஒரு பெண் என் மனைவியா, இல்லை ... இன்னும் பிறக்காத என் மகளா ?