Sunday, January 17, 2016

ஆசிரியர் தினம்



ஆசிரியர் தினப்பதிவாக முகநுலில் ஒரு மொக்கை பதிவை இட்ட பிறகு எழுந்த ஆர்வத்தால் இதை எழுதினேன். (பதிவேற்றிய மாதத்தை பாருங்கள்..அட்ட சோம்பேறியாகிவிட்டேன் என்பதற்கு எல்லா அடையாளமும் வந்து விட்டது).

ஒரு கீழ் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து வாழ்வின் இரு வேறு எல்லைகளையும் தொட்டுச்செல்லும் வாழ்க்கைமுறையில் உழன்று, கெ ட்டுப்போய்விடுவோமோ அல்லது நல்ல நெறிகளுடன் வாழ்க்கை அமையுமா என்ற பயத்துடன் தான் வாழ்க்கை நகர்ந்தது.

ஆரம்பப்பள்ளியில் உடன் படித்ததில் சரி பாதி மாணவர்கள் வாழ்வின் மிக கீழ்நிலையில் இருந்து வருபவர்களாக இருக்க அவர்களுக்காக எந்த முயற்சியும் எடுக்காத ஆசிரியர்கள்,

தங்கள் வீட்டுக்கு தேவையான சிறு வேலைகளை செய்ய பணித்த ஆசிரியர்கள்,

சிறு தவறுகள், தவறுதல்களுக்கு கூட அடி பின்னியெடுத்த ஆசிரியர்கள்,

பாடத்தை தவிர வேறு எதுவுமே பேசாத ஆசிரியர்கள்,

பாடத்தையே பாடல் போல / படம் போல எடுத்த ஆசிரியர்கள்,

பாடங்களோடு நெறிகளையும் நேர்மைத்திறனையும், பேசிய ஆசிரியர்கள்,

பாடம் என்பதையே பேசாமல் முழுக்க முழுக்க மாணவனின் பங்கு பெறலை, மகிழ்ச்சியான கணங்களை  மட்டுமே உருவாக்கிய ஆசிரியர்கள்,

மிக மிக சவாலான சூழ்நிலையில் வேலை மாணவர்களின் தேர்ச்சி திறனை மேம்படுத்த முயன்ற ஆசிரியர்கள்

தன்னியல்பில்லாது போன போதும் கண்டிப்பு மட்டுமே அடையாளமாக்கி கொண்ட ஆசிரியர்கள்..

தாய் போல தாலாட்டிக்கொடுத்து தூங்க மட்டுமே வைத்த ஆசிரியர்கள்,

தன்னுடைய அகந்தையை திருப்திப்படுத்த மாணவனின் எதிர்காலம் சீரழிவதை பற்றி துளி கூட கவலைப்படாத பொறுப்பற்ற ஆசிரியர்கள் ..

ஆசிரியர் ஆகிவிட்ட காரணத்தாலேயே ஆசிரியர் போல நடிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்த ஆசிரியர்கள்...

கண்டிப்பா கனிவா எது தேவை என குழப்பத்திலேயே வாழ்ந்த ஆசிரியர்கள்...

என பலப்பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன்.

எல்லாரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்திருக்கிறது. நல்லதோ கெட்டதோ தெரிந்து கொள்ளும் போது தான் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று புரிகிறது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதைத்தாண்டி இந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

வந்து கற்றுக்கொள் என அழைத்து ஒரு முன்மாதிரியாகவோ அல்லது கூடா மாதிரியாகவோ (Guinea Pig க்கு தமிழில் என்ன?)இருந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டதும் விட்டு வந்ததும் நம் விருப்பம் தான்.

ஆசிரியர் தினம் என்ற ஒன்று போல் கற்றுக்கொள்ளல் தினம் என்ற ஒன்றும் மிக அவசியம் இல்லையா?

இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கு ஆசிரியர்கள் முதற்காரணமாக இல்லாமல் போகலாம். ஆனால் நாம் என்னவாக ஆக நினைத்தோமோ அதை நோக்கி எல்லா ஆசிரியர்களும் ஒரு கணமேனும் நம்மை உந்தி தள்ளி இருப்பார்கள்..

இப்போது பல ஆசிரியர்கள் என் காலம் போல இல்லாமல் ( 80 / 90 கள் தான்) அதிகப்படியான் அழுத்தம் நிறைந்த சூழலில் வேலை செய்வது புரிகிறது.

இதில் புத்தகப்பாடத்தை தவிர நாம் எதிர்பார்க்கும் மதிப்பு கூட்டுதல்கள் சாத்தியமா என தெரியவில்லை. ஆசிரியர்களும் அதற்க்கு நேரமோ முயற்சியோ கொடுக்க முடியாது என தெரிகிறது.

வேகமாக தாண்டிசெல்லும் இந்த உலகில் ஆசிரியர் மட்டும் இளிச்சவாயத்தனமாக நம்மை ஏற்றி விடும் ஏணி போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது கூட சுயநலம் போல் தெரிகிறது.

ஆசிரியர் தினம் கொண்டாடும் வேளையில் கற்றல் தினத்தையும் கொண்டாடுங்கள், அந்த தினத்தை உங்கள் நாட்காட்டியில் தேடுங்கள், அது நேற்றே முடிந்து விட்டது.. ஏன் இன்றும் நாளையும் கூட கற்றல் தினம் தான்

ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அது தனது மாணவனை தேடிக்கொண்டே இருக்கிறது. அது நீங்களும் நானும் தான்.




 

உறவுகள்

உறவுகளைப்பிணை த்தோடும் இழை எவ்வளவு வலுவானது அல்லது எவ்வளவு பலவீனமானது என்று ஏதேனும் பிணக்கு மனதில் தோன்றும் போது தான் தெரிய வருகிறது..
 

Saturday, January 16, 2016

எம் தலைமுறை வாழ்வு




வற்றாத நதிகள் தாம் வணங்கு தெய்வமெனக்
கூறி வழிபாடு செய்து வாழ்ந்தோம் - அவை
வறண்டு தீர்ந்தோடிட வழி நுறு கண்டிட்டு
செயல் முடித்து சிரித்து நின்றோம்..

திணையோடு இணையான தானியம் பல கண்டு
உடலுக்கு உரமூட்டினோம் - இன்று
தின்றாலும் செரிக்காத தீங்குகள் பல தின்று
நோய் சேர்த்து நடமாடினோம்.

குயிலோடு மயிலாடும் குளிர்ந்த மரம் சேர்த்து
மனை கட்டி மகிழ்ந்து வாழ்ந்தோம் - நாமே
குருவியும் புக முடியா கான்கிரீட்டுகள் கட்டி
எம் மனையென்று இறுமாப்பு கொண்டோம்.

சூரியன் சந்திரனின் சுற்றளவு என்னவென
வான்வரை ஆராய்ந்து வாழ்ந்தோம்- இன்று
பொறியியல் மருத்துவம் படித்திட்ட பின்னாலும்
அறிவிழந்து தோய்ந்து வாழ்ந்தோம் ..

கற்காலம் முதலான பொற்காலம் வரையிலும்
வரலாறு சேர்த்து வைத்தோம்.- பின்னர்
வந்திட்ட பறங்கியர் வழி நடந்து - நம் நம்
தாத்தனின் பெயர் கூட மறந்தோம்.

மொழிதான் நம் தாயெனும், மொழிதான் நம் மரபெனும்
மூத்ததோர் சேதி உரைத்தோம்  - நாமே நம்
மொழி கூறல் இழிவென தவறாக எண்ணிட்டு
நம் குழந்தைகள் மரபழித்தோம்..

வங்கத்து நெடுகிலும் மங்கம்மாள் சாலையிலும்
மரம் சேர்த்து பாதை செய்தோம் - இன்று
சாலை அகலிக்க மரங்களை அகழ்ந்து விட்டு
பாலையில் பயணம் செய்கிறோம்.

மாடுகளையும் மரங்களையும் மட்டுமா அழித்தோம்.
மரத்துப்போன மனங்கள் கொண்டு
மனிதத்தையும் அழித்து முடித்து
அம்மணமாய் நிற்கிறோம்..

 

பொய்யால் நிரம்பாத கொய்யா





 
திரைப்படங்களை நிஜவாழ்வுடன் இணைத்துப்பார்க்கும் சாதாரண சினிமா ரசிகனாக இருக்கும் எந்த ஒரு தமிழ் ரசிகனுக்கும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு மறைவு பாலச்சந்தருடையது.

விரும்பாத மணமொன்று காற்றில் வருவது போல வந்து தாக்கியது அவரது மரணசெய்தி. திரைப்படங்களின் தாக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த ஒரு சாதாரண குடிமகனுக்கும் கூட இது என் கதை..என் வாழ்வில் நிகழ்ந்த ஒன்று தான் என்று எண்ணவைக்கும் அளவுக்கு படைப்புகளை அளித்தவர் அவர்.

திரையின் வாயிலாக நேர்மறைத்தாக்கம் ஏற்படுத்திய ஒரு சிலரில் பாலச்சந்தர் முக்கியமானவர். அவர் எடுத்துக்கொண்ட கதைகளின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களின் அளவு தான் அதன் நேர்மைத்திறனுக்கு அளவுகோல்.

அரங்கேற்றம் படமாகட்டும், சிந்து பைரவியாகட்டும் மனித மன உணர்வுகளை கட்டுமனப்படுத்தி சிற்பமாய் நமக்கு கொடுத்தவர் அவர்.

வேறுபடுதலும், வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும், உணர்ச்சிக்குவியல்களும், மன மாறுபாடுகளும், சமுக அவலங்களும், சமூக அளவுகோல்களும், குடும்பபிணைப்புகளும் அவற்றின் சங்கிலிப்பிடிப்புகளும் அதனாலான மூச்சுதிணறல்களுமாக அவரது திரைப்படைப்புகள்  அழகுற செதுக்கப்பட்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்ததை மறக்க முடியாது.

வணிக ரீதியாலான அழுத்தம் மூச்சுத்திணற வைக்கும் திரை உலகில் ஒரு உறுதிப்பாட்டுடன் தான் எடுத்துக்கொண்ட, தான் விரும்பிய கதைக்கருக்களை மட்டும் பெரும்பாலும் படமாக்கி, பெரும்பாலும் வணிக ரீதியிலும் சமரசம் காட்டிய பாலச்சந்தர் நிச்சயமாக ஒரு முன் மாதிரி. திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்.

உன்னால் முடியும் தம்பியில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் உதயமூர்த்தியை வேண்டுமானால் நாம் நிஜ வாழ்வில் சந்திக்காமல் போயிருக்கலாம், ஆனால் தன தந்தையால் ஒரு கோணத்தில் வளர்க்கப்பட்டு, தன சிந்தனையால் மற்றொரு கோணத்தில் சிந்திக்கபழகி அதனால் உரசல்களுக்கு ஆட்படும் எத்தனையோ இளைஞர்களை நாம் நித்தம் பார்க்கிறோம். உதயமூர்த்தி வெளியேறி தன்னை நிருபித்தார். பல உதயமூர்த்திகள் தமது திறமையை வெளிப்படுத்த முடியாமல், குடும்பத்தோடு தகவமைத்துக்கொள்ள முடியாமல் தங்கள் வாழ்வின் நீட்சியை மட்டும் மேற்கொண்டு வருவது நிஜம்.

இதற்கு சற்றும் குறையாதது பரஸ்பர ஆர்வங்கள் ஒத்துப்போகாத கணவன், மனைவி விவகாரம், சிந்து பைரவி படத்தின் அடிநாதம் இசை, ஆனால் அதை உயிரோட்டமாக எடுத்து செல்வது ஜே  கே பிக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஒத்துப்போகாத இசை ஆர்வம், புரிந்து கொள்ள இயலாமை அல்லது முயற்சிக்காமல் இருப்பதன் விளைவாக ஆர்வமும், ஆர்வக்கோளாறும் உள்ள இன்னொரு பெண் சிந்துவாக உள்ளே நுழைகிறாள். நிஜ வாழ்வில் பல பைரவிக்கள், பல சிந்துக்கள், பல வீடுகளில் சிந்து பாட்டில் வடிவத்திலோ அல்லது உடைந்து போன தாம்பத்தியத்தின் நடுவே விழுந்த திரை போல தான் உள்ளே நுழைகிறாள்.

வறுமையின் நிறம் சிகப்பு ரங்கா பல வீடுகளில் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அப்பாக்களின் பாட்டுக்கு பின்பாட்டு பாடிக்கொண்டு இருப்பதை சகஜமாக பார்க்க முடியும்.

அவள் ஒரு தொடர்கதை போல, அரங்கேற்றம் போல கையாலாகாத தகப்பன்களும், ஆண்மை நிரம்பிய பெண்களும் நமது சமூகத்தில் எங்கும் பரவியிருக்கிறார்கள்.


பொய்யால் நிரம்பிய ஒரு கொய்யாவை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த தமிழ் ரசிகனுக்கு அந்த கொய்யாவுடன் உப்பும் உரைப்பும் சேர்த்து உரைக்கும் படி தந்த நல்ல தோட்டக்காரன் பாலச்சந்தர்.

மேடை நாடகத்திலும், சின்னத்திரையிலும் சரியான படைப்புகளை தந்து ஒரு ராஜபாட்டையை திறந்து வைத்த ஜாம்பவான் பாலச்சந்தர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.