Saturday, February 27, 2016

பிணைப்பு



விட்டு விட்டு பெய்யும்மழை போலன்றி
விடாது இலைகளை உதிர்க்கிறது
இலையுதிர்கால மரமொன்று...

காட்டு எலி ஒன்றை முதல் வேட்டையாடிய
குட்டியை எட்ட நின்று பார்த்து
மௌனமாக நகர்கிறது தாய்ச்சிங்கம்...

வேரடி மண்ணோடு பெயர்க்கப்பட்டு
டெம்போ வேனில் மலர்ச்சியோடு பயணிக்கிறது
இன்னொரு விவசாயிக்கு உயிர் கொடுக்கபோகும் தென்னங்கன்று...

பிறந்து இரண்டொரு நாட்களில் தன் விரல் பிடித்த
மகன் கையை அவனது அறுபதிலும் விட அஞ்சுகிறாள்
தமிழ்த்தேசம் வளர்த்தெடுத்த தாயொருத்தி...

 

Sunday, February 21, 2016


நமது வாழ்க்கை முறை இயற்கையை ஒத்துள்ளதா ( ) புறந்தள்ளியுள்ளதா ?
 


நமது இன்றைய வாழ்க்கை முறையானது இயற்கையை புறந்தள்ளியே உள்ளது. நமது முன்னோர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்கை முறையை வாழ்ந்தனர், ஆனால் நமது இன்றைய தலைமுறையோ இயற்கையை சிறிது சிறிதாக அழித்து வருகிறோம். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்டே வாழ்கிறோம்.  இன்றைய சூழலில் ஒரு வீட்டில் கணவன்  மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர், ஆகையால் அவர்களால் வீட்டில் போதுமான கவனம் செலுத்த இயலவில்லை. ஒருபுறம் அறிவியலின் வளர்ச்சி பெருமைக்குரியதாக இருந்தாலும், மறுபுறம் அதை தவறான வழிகளில் செயல்படுத்த நாம் முனைகிறோம். நமது முன்னோர்கள் விவசாயத்தைபெரிதும் நம்பி வாழ்ந்தனர், ஆனால் இன்றைய சூழலில் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர் 
நாம் அறிவியலின் வளர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறிது விவசாயத்துக்கும் கொடுக்கலாமே . அன்று மரங்கள் இல்லாத வீட்டை பார்ப்பது அரிது.. ஆனால் இன்று வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று பிரச்சாரம் செய்தும் கூட நாம் மரங்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே இருக்கிறோம்
இயற்கை நமக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் மரங்கள். ஆனால் சொற்ப வருமானத்திற்காக நாம் அதை அழிக்க முற்படுகிறோம்.இறைவன் நமக்கு அற்புதமாய் வழங்கிய இயற்கை அன்னையை நாம் அழித்து துன்புறுத்துகிறோம். நமது முன்னோர்கள் இயற்கையாய் விளைவித்த உணவுப்பொருட்களை உண்டு நோய் நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைக்கோ பூச்சிக்கொல்லி மருந்துகள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றை பயன் படுத்தி விவசாயம் செய்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த வாழ்க்கை சூழலும் பாதிக்கப்படுகின்றது. இன்று வீட்டுக்கு ஒரு வாகனம் உள்ளது இதனால் வாகனப்போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபடும் அபாயம் உள்ளது.

இன்றைய சூழலில் நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். அவற்றை ஒழுங்காக அப்புறப்படுத்தாமல் தெருவில் வீசுவது, கண்ட இடங்களில் வீசுவது ஆகிய செயல்களை செய்கிறோம். இன்றைக்கு சாணம் தெளித்து வாசலை பெருக்கும் வழக்கம் மாறிவிட்டது. சாணம் தெளிப்பதால் நோய்க்கிருமிகள் நம் வீட்டிற்குள் வராதுஇன்று சாணம் என்றாலே ஏதோ தீண்டத்தகாத பொருள் போல மாறிவிட்டது . அதனை தவறு என்பது போல் இன்றைய தலைமுறையினர் ஒதுக்கி வருகின்றனர். நாம் மரங்களை வெட்டி ஆறு குளங்களை மூடி அதன் மேல் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுகிறோம். இது போல் செயல்கள் எத்துனை பெரிய பேரிடர்களை உருவாக்கும் என்று அறிந்த பின்னரும் நாம் சில தவறுகளை செய்து வருகிறோம்.
உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் இப்படி எல்லாவற்றிலும், மாற்றத்தை உண்டாக்கி நாம் அழிவைத்தேடி செல்கிறோம். நம் முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் வாழ்ந்திருந்தாலும் கொடிய நோய்களையும் இயற்கையான மருத்துவ  மூலிகைகளை கொண்டு குணப்படுத்தியுள்ளனர்,ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சி மிக விரைவாக இருந்தாலும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிற்தே தவிர குறையவில்லை. இருதய நோய், புற்று நோய் இன்னும் புதிய நோய்கள் பலவற்றை வரவேற்கிறோம்
அறிவியல் என்ற பெயரில் குடிக்கின்ற தண்ணீரில் கூட நச்சு பொருட்களை கலந்து அதை சுத்தம் செய்கிறோம். இப்படி நாம் எல்லாவற்றையும் அறிவியலின் வளர்ச்சி என்ற பெயரில் செய்து வருகிறோம். இந்த சூழலை மாற்றி இனி வரும் தலைமுறைக்காவது நாம் இயற்கையின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்போம்.
இயற்கை அன்னை நமக்கு அள்ளித்தருகின்ற நன்மைகள் ஏராளம். ஆனால நாம் வியாபார நோக்கத்திற்காக அதை தவறாக உபயோகப்படுத்தி அதை அழிக்க முற்படுகிறோம். ஒட்டு மொத்தமாக நாம் இன்றைய சூழலில் இயற்கையை புறந்தள்ளியே வாழ்கிறோம்.இனிவரும் நமது அடுத்த தலைமுறைக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை பின்பற்ற கற்றுக்கொடுப்போம். வியாபார நோக்குடன் அல்லாமல் அதை செய்வோம்.
இறைவனின் அரிய வரப்பிரசாதம் இயற்கை அன்னை அவளை நாம் நம் மடியில் வைத்து தாலாட்டுவோம்

 




. தனலட்சுமி : தாக்கா நகரில் கடந்த 5 வருடங்களுக்காக வசித்து வருகிறார். தனலட்சுமிக்கு இந்த எழுத்தின் மூலம் அறிமுகமாவது முதல் முறை. இவர் ஒரு இளங்கலை இயற்பியல் பட்டதாரி