Sunday, January 17, 2016

ஆசிரியர் தினம்



ஆசிரியர் தினப்பதிவாக முகநுலில் ஒரு மொக்கை பதிவை இட்ட பிறகு எழுந்த ஆர்வத்தால் இதை எழுதினேன். (பதிவேற்றிய மாதத்தை பாருங்கள்..அட்ட சோம்பேறியாகிவிட்டேன் என்பதற்கு எல்லா அடையாளமும் வந்து விட்டது).

ஒரு கீழ் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து வாழ்வின் இரு வேறு எல்லைகளையும் தொட்டுச்செல்லும் வாழ்க்கைமுறையில் உழன்று, கெ ட்டுப்போய்விடுவோமோ அல்லது நல்ல நெறிகளுடன் வாழ்க்கை அமையுமா என்ற பயத்துடன் தான் வாழ்க்கை நகர்ந்தது.

ஆரம்பப்பள்ளியில் உடன் படித்ததில் சரி பாதி மாணவர்கள் வாழ்வின் மிக கீழ்நிலையில் இருந்து வருபவர்களாக இருக்க அவர்களுக்காக எந்த முயற்சியும் எடுக்காத ஆசிரியர்கள்,

தங்கள் வீட்டுக்கு தேவையான சிறு வேலைகளை செய்ய பணித்த ஆசிரியர்கள்,

சிறு தவறுகள், தவறுதல்களுக்கு கூட அடி பின்னியெடுத்த ஆசிரியர்கள்,

பாடத்தை தவிர வேறு எதுவுமே பேசாத ஆசிரியர்கள்,

பாடத்தையே பாடல் போல / படம் போல எடுத்த ஆசிரியர்கள்,

பாடங்களோடு நெறிகளையும் நேர்மைத்திறனையும், பேசிய ஆசிரியர்கள்,

பாடம் என்பதையே பேசாமல் முழுக்க முழுக்க மாணவனின் பங்கு பெறலை, மகிழ்ச்சியான கணங்களை  மட்டுமே உருவாக்கிய ஆசிரியர்கள்,

மிக மிக சவாலான சூழ்நிலையில் வேலை மாணவர்களின் தேர்ச்சி திறனை மேம்படுத்த முயன்ற ஆசிரியர்கள்

தன்னியல்பில்லாது போன போதும் கண்டிப்பு மட்டுமே அடையாளமாக்கி கொண்ட ஆசிரியர்கள்..

தாய் போல தாலாட்டிக்கொடுத்து தூங்க மட்டுமே வைத்த ஆசிரியர்கள்,

தன்னுடைய அகந்தையை திருப்திப்படுத்த மாணவனின் எதிர்காலம் சீரழிவதை பற்றி துளி கூட கவலைப்படாத பொறுப்பற்ற ஆசிரியர்கள் ..

ஆசிரியர் ஆகிவிட்ட காரணத்தாலேயே ஆசிரியர் போல நடிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்த ஆசிரியர்கள்...

கண்டிப்பா கனிவா எது தேவை என குழப்பத்திலேயே வாழ்ந்த ஆசிரியர்கள்...

என பலப்பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன்.

எல்லாரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்திருக்கிறது. நல்லதோ கெட்டதோ தெரிந்து கொள்ளும் போது தான் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று புரிகிறது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பதைத்தாண்டி இந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

வந்து கற்றுக்கொள் என அழைத்து ஒரு முன்மாதிரியாகவோ அல்லது கூடா மாதிரியாகவோ (Guinea Pig க்கு தமிழில் என்ன?)இருந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டதும் விட்டு வந்ததும் நம் விருப்பம் தான்.

ஆசிரியர் தினம் என்ற ஒன்று போல் கற்றுக்கொள்ளல் தினம் என்ற ஒன்றும் மிக அவசியம் இல்லையா?

இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கு ஆசிரியர்கள் முதற்காரணமாக இல்லாமல் போகலாம். ஆனால் நாம் என்னவாக ஆக நினைத்தோமோ அதை நோக்கி எல்லா ஆசிரியர்களும் ஒரு கணமேனும் நம்மை உந்தி தள்ளி இருப்பார்கள்..

இப்போது பல ஆசிரியர்கள் என் காலம் போல இல்லாமல் ( 80 / 90 கள் தான்) அதிகப்படியான் அழுத்தம் நிறைந்த சூழலில் வேலை செய்வது புரிகிறது.

இதில் புத்தகப்பாடத்தை தவிர நாம் எதிர்பார்க்கும் மதிப்பு கூட்டுதல்கள் சாத்தியமா என தெரியவில்லை. ஆசிரியர்களும் அதற்க்கு நேரமோ முயற்சியோ கொடுக்க முடியாது என தெரிகிறது.

வேகமாக தாண்டிசெல்லும் இந்த உலகில் ஆசிரியர் மட்டும் இளிச்சவாயத்தனமாக நம்மை ஏற்றி விடும் ஏணி போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது கூட சுயநலம் போல் தெரிகிறது.

ஆசிரியர் தினம் கொண்டாடும் வேளையில் கற்றல் தினத்தையும் கொண்டாடுங்கள், அந்த தினத்தை உங்கள் நாட்காட்டியில் தேடுங்கள், அது நேற்றே முடிந்து விட்டது.. ஏன் இன்றும் நாளையும் கூட கற்றல் தினம் தான்

ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அது தனது மாணவனை தேடிக்கொண்டே இருக்கிறது. அது நீங்களும் நானும் தான்.




 

No comments:

Post a Comment